ராமதாசுக்கே..எடப்பாடி அல்வா; தைலாபுரம் தோட்டத்தில் அனல்!

தமிழ்நாட்டில் இனியும் தேசிய கட்சிகளுடனும், திராவிட கட்சிகளுடன்

கூட்டணி இல்லை. அப்படி ஒருவேளை கூட்டணி அமைத்தால் பெற்ற தாயுடன் உறவு வைத்துக்கொள்வதற்கு சமம் என்ற கோஷத்துடனும்,‘மாற்றம்.. முன்னேற்றம்..அன்புமணி’ என்ற பஜனையுடனும், கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் களமிறங்கிய பாமகவுக்கு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியே பரிசாக கிடைத்தது.

இதன் பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும், பாமக மண்ணை கவ்வியதால் வாக்கு வங்கி அதல பாதாளத்துக்கு சென்றது. இதையடுத்து இனியும் வீராப்பு காட்டினால் வேலைக்கு ஆகாது என முடிவெடுத்த பாமக கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக தலைமையில் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

அப்போதே இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் அன்புமணி ராமதாசை கேள்விகளால் துளைத்தெடுத்தனர். சமூக வலைதளவாசிகளும் ரூ. 500 கோடி கைமாறி இருப்பதாக விமர்சனங்களை முன்வைத்தனர்.

இக்கூட்டணியில் பாமக 7 தொகுதியில் போட்டியிட்டது. ஆனால் போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் பாமக தோல்வியை தழுவியது. குறிப்பாக பாமக கோட்டை என கருதப்படும் தருமபுரியில், அன்புமணி

எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வகுமாரிடம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

ஆனாலும் அந்த கவலையை மறக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்தபோது அளிக்கப்பட்ட உறுதிப்படி அன்புமணி ராமதாசுக்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தந்தது

இதைத் தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் மீண்டும் போட்டியிட்ட பாமக 5 இடங்களில் மட்டுமே வெற்று பெற்றது. இது அப்பட்டமாக பாமகவின் செல்வாக்கு என்ன என்பதை வெளிப்படுத்துவதாக ஆய்வு கருத்துகள் வெளியிடப்பட்டு இருந்தன.

இதனால் டென்ஷன் ஆன பா.ம.க நிறுவனர் ராமதாஸ், முதல்வர் நாற்காலியில் அன்புமணி ராமதாசை அமர்த்தி பார்க்கும் எண்ணத்துக்கு, அதிமுக இடையூறாக இருக்கும் என கருதினார்.

இதன் தொடர்ச்சியாக நடந்து முடிந்த 2021ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து களம் கண்டது. ஆனாலும் பலரும் நினைத்தபடியே பாமகவுக்கு சரிவே கிடைத்தது.

இதையே ஒரு பாடமாக எடுத்துக்கொண்ட பாமக மீண்டும் ‘மாற்றம்..முன்னேற்றம்..அன்புமணி’ என்ற பாணியில் களம் இறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் ஒரு பகுதியாகவே, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக, தைலாபுரம் தோட்டத்து ஆட்களே பகிரங்கமாக ஒப்புக்கொள்கின்றனர்.

அத்துடன் இல்லாமல் கட்சியை பழைய ஃபார்முக்கு கொண்டு செல்லும் திட்டத்துடன் தொண்டர்கள் சந்திப்பை ராமதாஸும், அன்புமணியும் அடுத்தடுத்து நடத்தி பாமகவினருக்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.

இந்த சூழலில் தான் பாமகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவும், வன்னியர் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான கார்த்தி இல்ல திருமணம் சேலத்தில் சமீபத்தில் நடந்துள்ளது.

இந்த திருமணத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். மறுநாளில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குடும்பத்துடன் சென்று வாழ்த்தினர்.

சேலத்தில் இருக்கும் பாமக பிரமுகர் வீட்டில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மணமக்களை வாழ்த்திக் கொண்டு இருந்தபோது, அதே சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பாமகவை சேர்ந்த ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் முருகேசன் தலைமையிலான முக்கிய நிர்வாகிகள் சுமார் 100 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

இதனை அறிந்த ராமதாஸ் மற்றும் அன்புமணி, ‘சேலத்துக்கு வந்த இடத்துல..நம்ம கட்சிக்காரர் வீட்டு கல்யாணத்துல கலந்துகிட்ட மறு நாளில்..நமக்கே எடப்பாடி பழனிச்சாமி அல்வா தந்துவிட்டாரே’ என விழுங்கவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்துள்ளனர்.

அப்போது குறுக்கே வந்த மாவட்ட நிர்வாகி ஒருவரை அழைத்த ராமதாஸ், ‘அதிமுகவே எங்க போயிட்டு இருக்குன்னு.. தெரியலை. அங்கே போய் சேரும் அளவுக்கு கட்சியில் என்ன தான் பிரச்சனை போய்கிட்டு இருக்கு?’ என, கேட்டு குடைந்து எடுத்ததால் நிர்வாகிகள் கலங்கிப் போய் கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.