139 தொகுதியில் வெற்றி பெற்று குஜராத்தில் மீண்டும் பாஜ ஆட்சி அமைக்கும்: கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்

அகமதாபாத்: குஜராத் தேர்தலில் 139 சீட்களுடன் அமோக வெற்றி பெற்று மீண்டும் பாஜ ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் அம்மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜவை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால் மும்முனை போட்டி உருவாகி உள்ளது. பாஜ ஆட்சி மீது குஜராத் மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், சமீபத்தில் மோர்பி தொங்கு பாலம் அறுந்து 135 பேர் பலியான சம்பவம் பாஜ ஆட்சி நிர்வாகத்தின் தோல்வியாக மக்கள் பார்ப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதன் காரணமாக, குஜராத்தில் பாஜ ஆட்சி கவிழுமா என எதிர்பார்க்கப்படும் நிலையில், சி-வோட்டர், ஏபிபி தனியார் நிறுவனங்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதன்படி, ‘182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் பாஜ 131 முதல் 139 இடங்களை கைப்பற்றும். கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ 99 இடங்களில் வெற்றி பெற்றது. 2017ல் 77 இடங்களை பெற்றிருந்த காங்கிரசின் எண்ணிக்கை, இந்த முறை 31 முதல் 39 இடங்களை கைப்பற்றும். அதேநேரம் ஆம் ஆத்மி கட்சி 7 முதல் 15 இடங்களை கைப்பற்றும். அதே 2017ம் ஆண்டு தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரசின் பெரும்பாலான ஓட்டுக்களைத்தான் ஆம் ஆத்மி பிரிக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு வாக்குகள் பிரிவது பாஜவுக்கு சாதகமாக அமையும் எனவும் தேர்தல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாஜி அமைச்சர் திடீர் ராஜினாமா: குஜராத் மாநில பாஜவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெய் நாராயண் வியாஸ் நேற்று அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பதான் மாவட்டம் சித்பூர் தொகுதியை சேர்ந்த இவர், பதான் மாவட்டத்தை கட்சியில் சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், எந்த தொகுதி பிரச்னையையும் கட்சி மேலிடம் கண்டுகொள்வதில்லை எனவும் குற்றம்சாட்டி உள்ளார். இவர், அடுத்ததாக காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மியில் சேர உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.