"ஆடியன்ஸ் தியேட்டருக்கு வந்து டிக்கெட் வாங்கிட்டாலே அது கமர்ஷியல் படம்தான்!"- `மௌனகுரு' சாந்தகுமார்

அருள்நிதியை வைத்து `மெளனகுரு’ மற்றும் ஆர்யா வைத்து `மகாமுனி’ படத்தை எடுத்த இயக்குநர் சாந்தகுமார் தற்போது அர்ஜுன் தாஸ் மற்றும் தான்யா ரவிசந்திரனை வைத்து தன்னுடைய புதிய படத்தைத் தொடங்கியிருக்கிறார். படம் குறித்து அவரிடம் பேசினேன்.

உங்களுடைய இரண்டு படங்களுமே வித்தியாசமான திரைக்கதை கொண்டவை, இந்தப் படம் எப்படியிருக்கும்?

“படம் பார்க்குற ஆடியன்ஸ் பாயின்ட் ஆஃப் வியூ வித்தியாசமா இருக்கும். சொல்ற கதையை ஆடியன்ஸூக்கு சுவாரஸ்யம் குறையமா சொல்லணும்னு நினைச்சுதான் எழுதுவேன். அப்படிதான் இந்தப் படத்தையும் எழுதியிருக்கேன். க்ரைம், ஆக்‌ஷன், ரொமான்ஸ், எமோஷன்ஸ், டிராமா, த்ரில்லர்னு எல்லா ஜானரும் இந்தப் படத்துல இருக்கும்.”

மகாமுனி

பொதுவா ரொமான்ஸ் உங்களுடைய படத்துல குறைவாதான் இருக்கும் இல்லையா?

“ஆமா, கதை எதை டிமான்ட் பண்ணுதோ அதைத்தான் ஸ்டோரில கொண்டு வந்திருக்கேன். கதாபாத்திரங்களை வடிவமைக்கிறதும் இப்படிதான். அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிற இந்தப் படத்துல ரொமான்ஸ் கொஞ்சம் இருக்கும். ஏன்னா, கதைக்கும் அது தேவைப்பட்டது.”

‘மகாமுனி’ படத்துக்குப் பிறகான இடைவெளிக்கு என்ன காரணம்?

“தயாரிப்பாளர் கிடைக்குறது கஷ்டமா இல்ல. ஆனா, கதைகள்ல சில மாற்றங்கள் இருந்தது. அதுக்காக சில காலம் தேவைப்பட்டது. ‘மகாமுனி’ ரிலீஸாகி கொஞ்ச நாள்ல லாக்டௌன் வந்திருச்சு. அதுக்கு அப்புறம், அடுத்த கதைக்கு ரெடியாகிட்டு இருந்தேன். நல்ல டீம் தேவைப்பட்டது. தவிர, கம்போர்ட் ஜோன் காரணத்துனால, என்னுடைய சொந்த பேனர்லயே இந்தப் படத்தை எடுக்குறேன்.”

மகாமுனி

உங்க சொந்த பேனர்ல எடுக்குறதாலதான் பெரிய ஹீரோஸ்கிட்ட போகலையா?

“அர்ஜுன் தாஸ் சின்ன ஸ்டார்னு சொல்ல மாட்டேன். இதுவரைக்கும் கதைக்குத் தேவைப்பட்டவங்கதான் நடிச்சிருக்காங்க. ஒரு நடிகரை கமிட் பண்றப்போ அவருடைய முந்தைய படங்களைப் பார்ப்பேன். அர்ஜுன் தாஸ் நடித்த படங்களையும் பார்த்தேன். அவங்க வொர்க் பெஸ்ட்டா இருக்கணும்ன்னுதான் பார்ப்பேன். எந்த ஆர்டிஸ்ட்டா இருந்தாலும் கேரக்டருக்கு எந்தளவுக்குப் பொருந்தி போறாங்கன்னு பார்ப்பேன். எப்படி நடிக்கணும்னு மட்டுமே கவனிப்பேன். என்னுடைய பேனர்ல இருந்து நடிக்க வர்றப்போ பெரியளவுல நடிப்பு இருக்கணும்னு நினைப்பேன். என்னுடைய முந்தைய ரெண்டு படங்கள்ல இதைச் சரியா பண்ணியிருந்தேன். இதுலயும், அர்ஜுன் தாஸ் நடிப்புக்குப் பெரிய ஸ்பேஸ் கிடைக்கும். படத்துல ஒரு முக்கியமான ரோல்ல மலையாள நடிகர் சுஜீத் சங்கர் நடிச்சிருக்கார். ஃபகத் ஃபாசில்கூட ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்துல நடிச்சிருப்பார். டிராமா ஆர்டிஸ்ட் கூட. கடலூர், கொடைக்கானல, பழனி, மதுரைனு ஷூட்டிங் ப்ளான் பண்ணியிருக்கோம்.”

முந்தைய ரெண்டு படங்களுக்கும் தமன் இசையமைத்திருந்தார். இதுல எப்படி?

“இதுக்கும் தமன்தான் இசையமைக்கிறார். பேக் க்ரவுண்ட் ஸ்கோர் தமன் ரொம்ப நல்லா பண்ணிருவார். ஸ்கிரிப்ட் டிமாண்ட் பண்ணுறதை அவர் அழகாகக் கொடுத்திருப்பார். படத்துல ரீ-ரெக்கார்டிங் போர்ஷன் தமனுக்குப் பெருசா இருக்கும். இதனாலதான் எப்போதும் தமனை அணுகுவேன். ‘மெளனகுரு’ ‘மகாமுனி’ ரெண்டு படத்துலயும் பாட்டு இருந்தது. கதையை நகர்த்தத்தான் எனக்குப் பாட்டு தேவைப்படும். ரெண்டு பேருக்குமான ரிலேஷன்ஷிப் பற்றிச் சொல்ல நாலு மாண்டேஜ் இருந்தாலே போதுமானதுன்னுதான் நான் நினைப்பேன்.”

சாந்தகுமார்

பக்கா கமர்ஷியல் படங்கள் எடுக்கணும்னு நினைப்பு இருக்கா?

“ஆடியன்ஸ், தியேட்டருக்கு வந்து டிக்கெட் வாங்கிட்டாலே அது கமர்ஷியல் படம்தான். இதில், என்னுடைய படங்கள் ஆர்டிஸ்ட்டிக்கா இருக்கு. ஆனா, விருதுகளைக் குறி வைத்து எப்போதும் படங்கள் எடுக்க மாட்டேன். ‘மகாமுனி’ சர்வதேச விருதுகள் வாங்கியது. ஆனா, அதை மைண்ட்ல வெச்சு அந்தப் படத்தை எடுக்கல. இங்கே இருக்குற வணிக சினிமா ஆடியன்ஸூக்குத்தான் படம் எடுக்குறேன். அதே நேரத்துல கலைத்தன்மையும் இருக்கும். ஆடியன்ஸை சிறப்பா என்கேஜ் பண்ணணும்னு நினைப்பேன். என்னுடைய திரைக்கதை சுவாரஸ்யமா இருக்கணும்னு நினைப்பேன். ‘மெளனகுரு’ பார்த்துட்டு எல்லா ஆடியன்ஸூம் கைதட்டுனாங்க. ‘மகாமுனி’ படத்துக்கு இது மூணுவகையில பிரியும்ன்னு தெரியும். சிலர், கைதட்டுனாங்க. சிலர் தலையைச் சொறிஞ்சுட்டு போயிட்டாங்க. சிலருக்குப் பிடிக்கலன்னு அமைதியா இருந்தாங்க. இதைத் தெரிஞ்சுதான் எடுத்தேன். ஆனா, என்னுடைய ரைட்டிங்ல புரியாதவங்களையும், பிடிக்காதவங்களையும் கடைசி வரைக்கும் உட்கார வெச்சிருவேன். அந்த நம்பிக்கை இருக்கு. கதை பேசுற ஐடியாலஜி அப்படித்தான் இருக்கும்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.