இவ்வளவு கோடி சொத்துக்களா? – அசரவைத்த திருப்பதி தேவஸ்தானத்தின் அறிக்கை

திருப்பதி திருமலா தேவஸ்தானம் வெள்ளை அறிக்கை வெளியிட்டு சொத்துப் பட்டியலை அறிவித்திருக்கிறது. அதில் நிலையான வைப்பு மற்றும் தங்கம் வைப்பு போன்ற அனைத்து தகவல்களையும் விவரமாக தெரிவித்திருக்கிறது.
தற்போதைய அறக்கட்டளை வாரியம் 2019 முதல் முதலீட்டு வழிகாட்டுதல்களை வலுப்படுத்தியுள்ளதாக TTD அறிவித்திருக்கிறது. மேலும், TTD-யின் தலைவர் ஆந்திர பிரதேச அரசின் பாதுகாப்பிற்காக திருப்பதி தேவஸ்தானத்தின் உபரி நிதியை முதலீடு செய்ய இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியாகிவந்த தகவலையும் மறுத்திருக்கிறது. மேலும், உபரி நிதியை திட்டமிட்ட வங்கிகளில் முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
TTD வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் (தெலுங்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது): ’’இதுபோன்ற சதித்தனமான பொய்த்தகவல்களை ஸ்ரீவாரி பக்தர்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். TTD மூலம் பணம் மற்றும் தங்க டெபாசிட்கள் மிகவும் வெளிப்படையான முறையில் பல்வேறு வங்கிகளில் செய்யப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
image
மேலும், கோவில் அறக்கட்டளை பேரில், ரூ.5,300 கோடி மதிப்பிலான 10.3 டன்கள் தங்கமும், ரூ.15,938 கோடி பணமும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது. TTD – இன் மொத்த சொத்து மதிப்பு ₹ 2.26 லட்சம் கோடி என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் பல்வேறு வங்கிகளில் நிலையான வைப்புத்தொகை வடிவில் 13,025 கோடியை TTD முதலீடு செய்திருந்தது.
இது தற்போது 15,938 கோடியாக அதிகரித்துள்ளது எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதன்மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் முதலீடு 2,900 கோடி அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. பக்தர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் நன்கொடைகள் மூலம் கோவிலுக்கு வருமானம் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.