சென்னையில் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளில் 50 சதவிதம் மட்டுமே முடிந்துள்ளது: அன்புமணி பேட்டி

விழுப்புரம்: புதிய தொழில் நுட்பங்களையும் நடைமுறைபடுத்தினால்தான் சென்னை எழில்மிகு நகராக மாற்றம் பெறும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் சார்ந்த பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்களை சீர்படுத்த வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் நானும் கடந்த 8 மாத காலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கைகள் இல்லை. சென்னையில் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள் 90 சதவிதம் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 50 சதவிதப் பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் நுட்பங்களையும் நடைமுறைபடுத்தினால்தான் சென்னை எழில்மிகு நகராக மாற்றம் பெறும்.

ஒரு மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு ஜனநாயக அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். நிர்வாகமும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசிடம் தான் இருக்கும். ஆளுநர் இதில் குறுக்கிடவும், எதிர்ப்புக் காட்டவும் கூடாது. ஆளுநரின் பணி என்பது அரசால் மேற்கொள்ளப்படும் திட்டங்களை தேவைப்பட்டால் ஆய்வு செய்து அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை அரசிடம் தெரிவித்து, குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாஜக ஆளாத மாநிலங்களில் அங்கு பொறுப்பில் இருக்கின்ற ஆளுநர்கள் எதிரானப் போக்கை கடைப்பிடிக்கின்றனர். இது மாநில மக்களுக்கு நன்மை கிடைக்காது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால்தான் அது சட்டமாகும். எனவே மாநில முதல்வரும் ,ஆளுநரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். அப்போது மக்களுக்கு நன்மை கிடைக்கும்.

2026ம் ஆண்டு தமிழகத்தில் பாமக தலைமையில் ஆட்சியை அமைப்போம். அதற்கான வியூகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறோம். அதற்கேற்றபடியான நடவடிக்கைகளையே 2024 ம் ஆண்டு மக்களவைச் தேர்தலிலும் கடைப்பிடிப்போம். என்.எல்.சி இந்தியா நிறுவனம் இதுவரை 37ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. இதிலிருந்து கிடைக்கக்கூடிய வருமானம் வடமாநிலங்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால் நிலம் கொடுத்தவர்களுக்கு இதுவரை உரிய இழப்பீடு வழங்கவில்லை.என்எல்சி நிறுவனம் நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்குவதுடன், நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். அப்போது, மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார், மாவட்ட செயலாளர் பால சக்தி, மாவட்டத் தலைவர்கள் தங்க ஜோதி, புகழேந்தி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.