புதுடில்லி : தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று டாக்டர்களுக்கான ஒப்பந்த பத்திர கொள்கையை ரத்து செய்ய, மத்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பை முடித்தவர்கள், ஒரு குறிப்பிட்ட காலம் அந்தந்த மாநில அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
தாக்கல்
இது குறித்து சம்பந்தப்பட்ட டாக்டர்களுடன், அரசு ஒப்பந்தம் செய்யும். இந்த விதிமுறையை மீறுவோர், மருத்துவ கல்லுாரி அல்லது மாநில அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்த வேண்டும்.
இந்த அபராத தொகை மற்றும் விதிமுறைகள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. இதையடுத்து நாடு முழுதும் ஒரே மாதிரியான ஒப்பந்த கொள்கையை உருவாக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வு செய்து பரிந்துரையாக அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
தற்போது மருத்துவ கல்வியில் நாடு முழுதும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, ஒப்பந்த பத்திர கொள்கையை மறு ஆய்வு செய்வது நல்லது.
ஆய்வு
மருத்துவ மாணவர்களுக்கு எந்தவொரு பத்திர நிபந்தனைகளாலும் கூடுதல் சுமை ஏற்பட்டு விடக் கூடாது. அனைத்து மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டு, ஒப்பந்த பத்திர கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
கிராமப்புற மற்றும் தொலைதுார பகுதிகளில் டாக்டர்களின் இருப்பை உறுதி செய்ய, கட்டாய கிராமப்புற சேவை இருக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவ ஆணையத்தின் இந்த பரிந்துரையை ஏற்று, ஒப்பந்த பத்திர கொள்கையை ரத்து செய்வது குறித்தும், அதற்கான வழிகாட்டும் விதிமுறைகளை உருவாக்குவது குறித்தும், மத்திய சுகாதார அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement