அகமதாபாத்: ‘நான் உருவாக்கிய குஜராத்’ (I have made this Gujarat) என்ற முழக்கத்தை அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் குஜராத் மாநிலத்திற்கு முதன்முறையாக வருகை தந்த பிரதமர் மோடி தனது சொந்த ஊரான வல்சட் கிராமம் கப்ரடாவில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், ‘நான் உருவாக்கிய குஜராத்’ (I have made this Gujarat) என்று முழக்கத்தை அறிவித்தார். குஜராத்தி மொழியில் அவர் இதனை அறிவித்தார். பின்னர் கூட்டத்தில் இருந்த மக்கள் அனைவரையும் அவர் அவ்வாறே முழங்க வைத்தார்.
சுமார் 25 நிமிடங்கள் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தத் தேர்தலில் குஜராத் பிரிவினைவாத சக்திகளை ஒழிக்கும். கடந்த 20 ஆண்டுகளாக மாநிலத்தின் பெருமையை சிதைக்க முயன்ற சக்திகள் இந்தத் தேர்தலிலும் வீழ்த்தப்படுவார்கள். நான் டெல்லியில் இருக்கும்போது எனக்கு குஜராத் தேர்தல் நிலவரம் பற்றிய புள்ளிவிவரங்கள் வந்தன.அதனை தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். இந்தத் தேர்தலில் கடந்த சாதனையை வீழ்த்தி பாஜக வெற்றி பெறும். அதனால், குஜராத் பாஜக பொறுப்பாளர்களிடம் என்னை எத்தனை முறை அழைத்தாலும், பிரச்சாரத்துக்கு வருவேன் என்று உறுதியளித்துள்ளேன். ஒவ்வொரு குஜராத்தியும் முழு தன் நம்பிக்கையுடன் உள்ளனர். இதயங்களில் இருந்து ஒருமித்த குரல் கேட்கிறது. ஆம் இது நீங்கள் உணர்வதுபோல் நான் உருவாக்கிய குஜராத்” என்றார்.