சென்னையை அடுத்து அமைந்திருக்கும் மாத்தூரில் தனியார் பள்ளி மைதானத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு நடிகர் விஷால் திருமணம் செய்துவைத்தார். 11 ஏழை ஜோடிகளும் ஏற்கனவே காதல் செய்து வந்துள்ளனர். அதற்கு இரு வீட்டாரும் ஒப்புதல் அளித்ததால் விஷால் நற்பணி மன்றம் மூலம் திருமணம் இன்று நடைபெற்றது. அவர்களுக்கு 51 பொருள்களுடன் சீர்வரிசையையும் விஷால் வழங்கினார். அதன் பிறகு மேடையில் பேசிய விஷால், “ எனக்கு குடும்பம் பெரிதாகிவிட்டது. 11 தங்கைகள் கிடைத்துள்ளனர். என் தங்கைகளை கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். என் வேட்டியை மடித்து கட்ட வெச்சிடாதீங்க மாப்பிள்ளைகளா. சும்மா இருக்க மாட்டேன்.
திருமணம் முடிந்ததோடு விட்டுவிட மாட்டேன், தொடர்ந்து கண்காணித்துகொண்டு இருப்பேன். உங்க பிள்ளைகளின் எதிர்காலத்தை நான் பார்த்துக்கொள்கிறேன். நல்ல விஷயம் செய்ய இதே மனநிலையில் இருப்பவர்கள் என்னோடு ஒன்றிணைய வேண்டும். படம் நடித்து அதில் வரும் பணத்தை வைத்து நூறு குழந்தைகளை படிக்க வைக்க உதவலாம்.
ஒற்றை வார்த்தையில் நிற்க வேண்டும். லேட் ஆனாலும் லேட்டஸ்ட்டா தீர்ப்பு வரும். நடிகர் சங்க கட்டடம் முடிந்ததும் பட்டு சேலை வழங்கப்படும். 3500 குடும்பங்கள் காத்திருக்கிறார்கள். வலி மரத்து போய்விட்டது. நான் எதை செய்தாலும் அதை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள்.
அதை பொருட்படுத்தாமல் செல்கிறேன். ஒஸ்தியான காரில் வரும் பெண்கள் படிக்கும் கல்லூரியில் படிக்க வேண்டும் என ஏழை தங்கை கேட்டார். அதற்காக பிச்சை எடுப்பதற்கு யோசிக்கவோ, தயங்கவோ மாட்டேன். 6 மாதத்திற்கு பிறகு முதல் மாணவியாக வந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார். பட்டம் பெற்று வெளியில் வந்து, வேறு பெண்ணை படிக்க வைக்கும் அளவிற்கு வரவேண்டும்” என்றார்.