சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் மெய்யப்பன் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தேவகோட்டைக்குச் செல்வது என்றால் சென்னையைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் வாடகை காரில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 3ம் தேதி தேவகோட்டையில் இருந்து கோவிலுக்கு செல்வதற்காக சக்திவேலின் காரை முன் பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து கடந்த 2ம் தேதி புறப்பட்ட சக்திவேல் தேவக்கோட்டையை சென்றடைய இரவு 10:30 மணி ஆகிவிட்டது. மறுநாள் காலை ஏழு மணிக்கு தான் மெய்யப்பனை அழைத்து செல்ல வேண்டும் என்பதால் மது அருந்திவிட்டு ராம் நகர் பேருந்து நிலையத்தின் அருகே காரில் உறங்கியுள்ளார்.

அப்பொழுது உறங்கிக் கொண்டிருந்த சக்திவேலை உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் எழுப்பி விசாரித்தது சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நள்ளிரவு 1:30 மணி அளவில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் காவலர் இளங்கோ ஆகியோர் சாதாரண உடையில் வந்து சக்திவேலை மீண்டும் விசாரித்துள்ளனர். அந்த காவலர்களிடம் தொழிலதிபர் மெய்யப்பன் வீட்டுக்கு சவாரிக்கு வந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
இதனை நம்பாத காவலர்கள் தொழிலதிபர் மெய்யப்பனுக்கு போன் செய்யும்படி வற்புறுத்தியுள்ளனர். அதற்கு ஓட்டுனர் சக்திவேல் மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் சக்திவேலை தாக்கிய போலீசார் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் கார் சாவியை பறித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சக்திவேல் மீது மது போதையில் கார் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பத்தாயிரம் ரூபாய் அபராதம் கட்டிவிட்டு காரை எடுத்துச் செல்லுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த சக்திவேல் தேவக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனை அடுத்து ஓட்டுனர் சக்திவேல் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டிவிட்டு கார் சாவியையும் தனது செல்போனையும் வாங்கிச் சென்றுள்ளார். குடித்துவிட்டு கார் ஓட்டினால் மட்டுமே போக்குவரத்துக் காவல் துறையினர் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் நிலையில் சட்ட ஒழுங்கு போலீசார் நின்று கொண்டிருக்கும் காரில் போதையில் உறங்கி இருந்த ஓட்டுனரிடம் பத்தாயிரம் ரூபாய் அபரதம் விதித்தது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.