"யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது" – திமுக அரசு மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும், ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என நாமக்கலில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதிமுக 51-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நாமக்கல் அடுத்துள்ள பொம்மைக்குட்டை மேட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
image
இதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தை 31 ஆண்டு காலம் ஆண்ட கட்சி அதிமுக. அதிமுக பிளவுபட்டுள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார், அதிமுக-வை முடக்க வேண்டும் என ஸ்டாலின் நினைத்தார். ஆனால், அது நிறைவேறவில்லை.
அதிமுகவினர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை தவிடு பொடியாக்கி மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும், அடுத்து வரும் எல்லாம் தேர்தல்களிலும் அதிமுக வெல்லும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்படும்.
அதிமுகவை வீழ்த்துவோம் என ஸ்டாலின் பகல் கனவு கண்டுள்ளார். அது பலிக்காது, திறமையற்ற பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆண்டு கொண்டுள்ளார், அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை தான் தற்போதைய முதல்வர் திறந்து வைத்து வருகிறார். யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது.
 image
அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்புள்ளது, அப்போது இரண்டிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். 11 அரசு மருத்துவக் கல்லூரி, 6 சட்ட கல்லூரி என 75-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை திறந்து தமிழகத்தில் உள்ள ஏழை, நடுத்தர மக்கள் உயர்கல்வி பெற வழிவகை செய்தது கடந்த அதிமுக அரசு.
அதிமுக கடந்த 10 ஆண்டுகளில் எந்த திட்டத்தை கொண்டு வரவில்லை என முதல்வர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்து எனக் கூறிய நிலையில் ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் ஆன பிறகும் எதையும் நிறைவேற்ற வில்லை.
இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தமிழகத்தில் போதை பொருட்கள் எங்கும் பரவிக் கிடக்கிறது. இதனை, திமுக அரசு தனி கவனம் செலுத்தி நிறுத்த வேண்டும்.
image
திமுகவில் உட்கட்சி பிரச்னை வெடித்து, அக்கட்சி தேய்ந்து கொண்டுவருகிறது. அதனை ஸ்டாலின் காக்க வேண்டும், அதை விடுத்து அதிமுக பிளவுபட்டுள்ளது என பேசுவதை கைவிட வேண்டும், அதிமுக பலமாக உள்ளது.
தேர்தலின் போது திமுக அரசு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மின்கட்டண உயர்வு, சொத்து வரி, குடிநீர் வரியையும் உயர்த்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
தேர்தலுக்கு முன்பு டீசல் விலையை குறைப்போம் என கூறிய திமுக அரசு அதை குறைக்காமல் லாரி தொழிலை நலிவடையச் செய்து வருகிறது. நூல் விலை உயர்வால் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திமுகவின் அவல ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி வருகின்றனர்.
image
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது தான் இந்தி திணிப்பை கொண்டு வந்ததனர். இப்போது அந்த கட்சியோடு தான் திமுக கூட்டணி வைத்துள்ளது. இந்தி திணிப்பை பற்றி பேச திமுகவுக்கு தகுதியில்லை.
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து மிக பெரிய வெற்றியை பெறுவோம், அதிமுகவில் ஓபிஎஸ் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை, பொதுக்குழு எடுத்த முடிவு இறுதியானது, நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் தான் இதை நான் ஆணித்தரமாக கூறுகிறேன்” என்று பேசினார்.
இந்த பொதுக் கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், தற்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.