வடலூர்: வடலூர் அருகே மருவாய் கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள தரைப்பாலத்தில் தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த மருவாய் கிராமத்தில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலம் தடுப்பு கட்டைகள் இன்றி உள்ளது. இதனால் மழைக்காலத்தில் இரவு நேரங்களில் சாலை தெரியாமல் வாகனங்கள் வாய்க்காலில் கவிழ்ந்து உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறையினர் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் மற்றும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கும்பகோணம் சென்னை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் (விகேடி) ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள், பள்ளி கல்லூரி பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்கின்றன. இது மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கு காய்கறிகள், பழங்கள், கம்பெனிகளுக்கு உதிரி பாகங்கள் எடுத்து செல்கின்ற முக்கியமான சாலையாகவும் இருந்து வருகிறது.
இந்த சாலையில் மருவாய் கிராமத்தின் அருகே தரைப்பாலத்தின் ஓரங்களில் தடுப்பு கட்டைகள் இல்லை. இதனால், மழை காலங்களில் சாலை மற்றும் பாலம் எங்கு உள்ளது என்று தெரியாமல் வாகன ஒட்டிகள் தட்டு தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. தற்பொழுது தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக இந்த தரைப்பாலத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தடுப்பு கட்டை அமைக்க வேண்டும், என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.