புதுடில்லி,:மத்திய ஆயுத போலீஸ் படைகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில், இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் எல்லை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பணியில் ஆறு மத்திய ஆயுத போலீஸ் படைப் பிரிவுகள் ஈடுபட்டுள்ளன. இந்தப் படைகளுக்கு, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தப் படைகளில் காலியாக இருந்த, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் நிரப்பப்பட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையில் மட்டும், 17 ஆயிரத்து 842 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் மிக அதிகபட்சமாக, 1 லட்சத்து 13 ஆயிரத்து 208 பேர் இணைந்துள்ளனர். எஸ்.எஸ்.பி., எனப்படும் சசஸ்திர சீமா பல் படையில், 29 ஆயிரத்து 243 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில், 12 ஆயிரத்து 482, ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ திபெத் எல்லை போலீஸ் படையில் 5,965, அசாம் ரைபிள்ஸ் படையில், 5,938 இளைஞர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.இந்தாண்டு ஜூலை நிலவரப்படி, இந்தப் படைகளில் 84 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.நாடு முழுதும் அரசுப் பணிகளில் காலியாக உள்ள, 10 லட்சம் இடங்களை நிரப்புவதற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சமீபத்தில் முதல்கட்டமாக, 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, இந்த ஆறு படைப் பிரிவுகளிலும் காலியாக உள்ள இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக, உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement