தமிழ்நாடு அரசு பரபரப்பு அரசாணை; தூக்கம் தொலைத்த அரசு ஊழியர்கள்!

தமிழக அரசின் அரசாணை எண் 115 அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளதாக அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாடு அரசு மனிதவள மேம்பாட்டு துறை கடந்த அக்டோபர் 18ம் தேதி வெளியிட்டு இருக்கும் அரசாணை நிலை எண்.115 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து விட்டு காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைய தலைமுறையினரின் மனதில் குழப்பம் மற்றும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அரசாணையில் காலி பணியிடங்கள் அதிகளவில் உள்ள அதேவேளையில் சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவினங்கள் மிகவும் அதிகமாக உள்ள ஓர் இக்கட்டான சூழலில் நாம் உள்ளோம்.

மனித வளம் தொடர்பான சீர்திருத்தம் மேற்கொள்வதற்காக ஒருங்கிணைந்த திட்டத்தை 6 மாத கால அளவிற்குள் முன்மொழிவதற்கான மனிதவள சீர்த்திருத்தக்குழு அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பேசியதைபோல 5 பேர் அடங்கிய மனிதவள சீர்திருத்த குழு அமைக்கப்பட்டு இருப்பதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு அப்போதே அரசு ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமைகளை, கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த நிலையில் நிதி அமைச்சர் உரை குறித்து கவலை கொள்ளவே தேவை இல்லை என்று கூறப்பட்டது.

இன்று மனிதவள சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு பெயரிலேயே மேம்பாட்டுக் குழு இல்லை. மனிதவள சீரமைப்புக் குழு என்று உணர்த்தப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை மக்கள் நலன் என்ற வார்த்தைகளை அழிந்துபோன இனங்கள் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கையின் உச்சக்கட்டமாக மாறி இருக்கிறது.

அரசு சேவைகளை தனியார்வசம் ஒப்படைப்பதன் மூலம் தங்களுக்கான கடமைகளில் இருந்தும், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை தாங்கிப் பிடிக்கும் தர்மத்தில் இருந்து விலகிக் கொள்ள நினைக்கின்றன.

அனைத்து வேலைகளுக்கும் அவுட்சோர்சிங் மூலம் ஆட்களை நியமிப்பது இளைஞர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும். இதுபோன்ற அரசாணைகளும், உத்தரவுகளும் ஜனநாயகம் என்ற நிரபராதியின் குரல்வளையை இறுக்கும் சா்வாதிகார கயிறுகள்.

ஏற்கனவே அரசு துறைகளில் காலியாக இருக்கும் 50 சதவீதத்திற்கும் மேலான டி பிரிவு பணி இடங்கள் நிரப்பப்படாமல் கைவிடப்பட்டு உள்ள நிலையில் தற்போதைய அரசாணையில் சி பிரிவு பணி இடங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதற்கான முகாந்திரங்கள் தெளிவாக்கப்பட்டு உள்ளன.

ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணி அமர்த்தப்படுவது என்பது அரசாங்கமே கொத்தடிமை அத்து கூலி முறையையும், உழைப்பு சுரண்டலையும் அரசுடைமை ஆக்கும் செயல் ஆகும்.

அரசாங்கம் வகுத்து உள்ள குறைந்தபட்ச ஊதியம், கண்ணியமான வாழ்க்கைக்கான உத்தரவாதம், பணிக்கொடை, தொழிலாளர் காப்புறுதி சட்ட பாதுகாப்பு போன்றவை கூட இந்த தனியார்மய அவுட்சோர்சிங் முறையால் ஒழிக்கப்பட்டு விடும்.

அவுட்சோர்சிங் முறைகளும், ஆட்குறைப்பு நடவடிக்கைளும், தனியார் மயத்தை நோக்கி பயணிக்கும் அரசாங்கத்தின் எண்ணங்களும், மீண்டும் பெயர் மாற்றப்பட்ட கிழக்கிந்திய கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் ஏற்பாடே என்பதை அரசு உணர வேண்டும்.

எனவே இந்த அபாயகரமான மற்றும் தமிழக மக்கள், இளைஞர்கள், அரசு துறைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க வெளியிடப்பட்டு இருக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் சார்பில் தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அரசு ஊழியர் சங்கம் கூறி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.