கடலூர்: கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் சுமார் 500 ஏக்கர் விளைநிலம் மழை தண்ணீரில் மூழ்கியது. வீராணம் ஏரியின் வடிகால் மதகும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. விடிய விடிய பலத்த மழை பெய்தது. இன்று (நவ.11) காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடலூர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை. புவனகிரி, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், பண்ருட்டி, வேப்பூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், சாலைகளில் ஆறு போல மழை தண்ணீர் ஓடியது. தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பலத்த மழையால் குறிஞ்சிப்பாடி பகுதியில் கல்குணம், ஓணான்குப்பம், பாதிரிக்குப்பம், பூதம்பாடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டட கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் சம்பா நெல் பயிரிட்டிருந்த விளைநிலங்கள் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இந்த நிலையில் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் ஏரிக்கு காட்டாறுகள் மூலம் மழை தண்ணீர் விநாடிக்கு 500 கன அடி வருவதால் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. 47.50 அடி முழு கொள்ளளவு உள்ள ஏரியில் தற்போது 45.60 தண்ணீர் உள்ளது. ஏரியின் பாதுகாப்பை கருதி ஏரியின் பிரதான வடிகால் மதகான வெள்ளியங்கால் ஓடை மதகு மற்றும் பூதங்குடி பகுதியில் உள்ள விஎன்எஸ்எஸ் வழியாவும் விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெள்ளியங்கால் ஒடையில் வெளியேற்றப்படும் தண்ணீரும், மண வாய்காலில் வரும் மழை தண்ணீரும் கான்சாகிப் வாய்க்காலில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்கிறது.

வெள்ள அபாயத்தை குறைக்கும் வகையில் நீர் வளத்துறையினர் கான்சாகிப் வாய்க்காலில் இருந்து குமராட்சி அருகே கோப்பாடி ஷெட்டர் பகுதியில் உள்ள ரெகுலேட்டர் வழியாக பழைய கொள்ளிடத்தில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றி வருகின்றனர். இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. மேலும் கீழணையில் இருந்து விநாடிக்கு 7 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. வீராணம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வடவாற்றில் தண்ணீர் அனுப்பி வைப்பது முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள் சிதம்பரம் ஞானசேகர், அணைக்கரை குமார் மற்றும் உதவிப் பொறியாளர்கள் ரமேஷ், முத்துக்குமார் மற்றும் நீர்வளத்துறை பணியாளர்கள் கொண்ட குழுவினர் வீராணம் ஏரி, கீழணை, கொள்ளிடம் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தொடந்து பலத்த மழை பெய்தால் மாவட்டம் முழுவதும் வெள்ள அபாயம் ஏற்படும்.
நேற்றைய மழையளவு பரங்கிப்பேட்டையில் 98 மிமீயும், கடலூரில் 83.6 மிமீயும், அண்ணாமலைநகரில் 75 மிமீயும், சிதம்பரத்தில் 58.8 மிமீயும், குப்பநத்தத்தில் 46.6 மிமீயும், புவனகிரியில் 42 மிமீயும், காட்டுமன்னார்கோவிலில் 36மிமீயும், வடக்குத்தில் 35 மிமீயும், லால்பேட்டையில் 34 மிமீயும், சேத்தியாத்தோப்பில் 30.2 மிமீயும், ஸ்ரீமுஷ்ணத்தில் 25.4 மிமீயும், பண்ருட்டியில் 22 மிமீயும், விருத்தாசலத்தில் 22.2 மிமீயும், வேப்பூரில் 13 மிமீயும் மழை பெய்துள்ளது.