நளினி உள்பட 6 பேரும் விடுதலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன?

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்பட 6 பேரும், சிறையில் இருந்தபடியே வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயற்சித்துள்ளனர். பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அனைத்து அம்சங்களும் இவர்களுக்கும் பொருந்தும் எனக் கூறி, அவர்கள் 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற 6 பேரும் விடுதலை கோர சட்ட வழிவகை ஏற்பட்டது.

இந்நிலையில், நளினி உள்ளிட்ட 6 பேரும் தங்களை விடுதலை செய்ய கோரி, தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பில், பேரறிவாளனின் நன்னடத்தை குறித்து, பரோலில் வெளிவந்தபோதும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொண்டதாக மேற்கோள் காட்டியுள்ளது. தாங்களும் அதேநிலையில் உள்ளதால், தங்களையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்கில் தங்களை விடுதலை செய்யும் வரை தங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதன் மீது எந்தவொரு முடிவும் எடுக்காமல் ஆளுநர் தரப்பு காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, இந்த விவகாரத்திலும், உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்படும் என தமிழ்நாடு அரசு எழுத்துபூர்வமாக தெரிவித்திருந்தது. மத்திய அரசு தரப்பில் எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய் மற்றும் நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சங்கரநாராயணன், சஞ்சய் ஹெக்டே, வழக்கறிஞர்கள் பிரபு மற்றும் ஆனந்தசெல்வன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி மற்றும் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் அமித் ஆனந்த் திவாரி, ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கு விசாரணை தொடங்கியவுடன், மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ் இன்று வரவில்லையா? என நீதிபதி கவாய் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, “அவர் ஜெனீவாவில் அரசு வேலைக்காக சென்றுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் கருத்து கேட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இந்த விவகாரம் தொடர்பாக பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது” என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, “முன்னாள் பிரதமர் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கும் அது கொண்டு செல்லப்பட்டது. ஆனால் ஆளுநர் தரப்பில் எந்தவொரு உரிய பதிலும் அளிக்கவில்லை, தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

பின்னர் மனுதாரர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், “பேரறிவாளன் விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் இவர்களுக்கு பொருந்தும். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கருத்து கேட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசுக்கு எதிராகத்தான் பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது” எனக் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் எவ்வளவு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது?” எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், “நான்கு பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு ஆயுள் தண்டன வழங்கப்பட்டது. ஆனால், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் சிறையில் உள்ளனர். உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வாழ்க்கையும் சிதைந்து போயுள்ளது. எனவே பேரறிவாளன் விடுதலையை அடிப்படையாக வைத்தும், இவர்கள் நன்னடத்தையை கணக்கில் கொண்டும் விடுவிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

பின்னர், தீர்ப்பளித்த நீதிபதிகள் கல்வி, நன்னடத்தை, அமைச்சரவை முடிவு அடிப்பட்டையில் இந்த உத்தரவை பிறப்பிப்பதாக தெரிவித்தனர். “ராபர்ட் பயஸ், சிறையில் இருந்தவாறு பட்டப்படிப்புகளை முடித்துள்ளார். அவரது நடத்தையும் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. சாந்தன், நன்னடத்தை திருப்தி அளிக்கிறது. பட்டப் படிப்பு மற்றும் PG டிப்ளமோ படிப்புகளை சிறையில் இருந்தபடியே முடித்துள்ளார். சுதந்திர ராஜா (ஜெயக்குமார்) , நன்னடத்தை திருப்திகரமாக உள்ளது. சிறையில் இருந்தவாறே பல்வேறு கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார். சில விருதுகளையும் பெற்றுள்ளார். அனைத்து கவிதையும் வெளியாகாவிட்டடாலும் இது அவரது முயற்சியை காட்டுகிறது.

ரவிச்சந்திரன், இவரது நடத்தையும் திருப்தி அளிக்கிறது. பட்டப்படிப்பை சிறையில் இருந்தவாறு முடித்துள்ளார். ஒரு சில விருதுகளையும் பெற்றுள்ளார். நளினி, ஒரு பெண், 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளார். அவரது நன்னடத்தை திருப்தி அளிக்கிறது. PG டிப்ளமோ படித்து கல்வித் தரத்தையும் சிறையில் இருந்தவாறு மேம்படுத்தியுள்ளார். ஶ்ரீஹரன் (முருகன்) , பல்வேறு படிப்புகளை சிறையில் இருந்தவாறே படித்துள்ளார். கணினி அறிவியலில் பட்ட மேற்படிப்பை முடித்துள்ளார். இவருடைய நன்னடத்தையும் திருப்தி அளிக்கிறது.

அனைவருமே சிறையில் இருந்தபடியே வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயற்சித்துள்ளனர். ஒரு சிலருக்கு உடல்நிலை குறைபாடும் உள்ளது. எனவே அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, பேரறிவாளன் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அனைத்து அம்சங்களும் இவர்களுக்கும் பொருந்தும். எனவே எந்த நிபந்தனையும், கட்டுப்பாடும் இன்றி உடனடியாக இவர்கள் ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று தீர்ப்பளித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.