அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சிக்கல்: வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம்!

அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் முறைகேடாக வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்ததாக அமைச்சர்

உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கலை, அறிவியல், இலக்கியம், பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு, வீட்டுமனைகள் ஒதுக்கும் வகையில் அரசு விருப்புரிமை ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ், எந்த ஆவணங்களும் இல்லாமல், ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வின், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோருக்கு திருவான்மியூரில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுர அடி வீட்டுமனைகள் கடந்த 2008ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தி சுயலாபம் அடைந்ததாகவும், அதற்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறி, அமைச்சர் ஐ.பெரியசாமி, ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர்சேட், அவரது மனைவி பர்வின், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கம், அவரது மகன் துர்கா சங்கர் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக 2013ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை பதிவு செய்வதற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறாததால், ஜாபர் சேட், வீட்டுவசதி வாரியத்தின் அப்போதைய செயல் பொறியாளர் முருகையா மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர் சேட்டின் மனைவி பர்வின் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக சென்னை எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 2019ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் பெரியசாமி, பர்வின் உள்பட நான்கு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், வழக்கு புலன் விசாரணையில் திரட்டப்பட்ட ஆவண ஆதாரங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து இவர்களுக்கு எதிராக வழக்கை தொடர போதுமான ஆதாரங்கள் உள்ளதாகச் சுட்டிக்காட்டி, வழக்கை ரத்து செய்ய மறுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.