தமிழக மக்கள் மீது பிரதமருக்கு அளவுக்கதிகமான பாசம் – உருகும் அண்ணாமலை

பிரதமர் மோடி நேற்று திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு வந்தார். அப்போது இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார். விழாவை முடித்துவிட்டு திரும்பும்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடியின் காரில் பயணித்தார். இந்தச் சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அவரது செயல்பாடு மோடிக்கும், அமித் ஷாவுக்கு திருப்தி அளித்ததால் டெல்லியின் குட் புக்கில் அண்ணாமலை இருக்கிறார். எனவேதான் அவரை தன் காரில் மோடி ஏற்றிக்கொண்டார் என கூறப்படுகிறது.

பிரதமர் மோடியைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இந்தியா சிமெண்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்னை வந்தார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு பாஜக தலைமை அலுவலகம் சென்ற அவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் நீண்ட நேரம் உரையாடினார்.

இந்நிலையில் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தமிழ்நாடு மக்களுக்கு பாஜக மீது அன்பு பெருகி வருகிறது. தமிழக மக்களின் அன்புக்குள்ளாகி இருக்கிறார் பிரதமர் மோடி. பிரதமரை நேற்று சந்திக்க வாய்ப்பு கிடைத்தது, அப்போது தமிழ்நாடு மக்கள் குறித்தும், தமிழகத்தில் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். தமிழ்நாடு மக்களிடம் பிரதமர் அளவுக்கதிகமாக பாசம் கொண்டவர். கொட்டும் மழையிலும் பெண்கள் கைக்குழந்தையுடன் பிரதமரை காண வந்தது நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. 

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா வருகை ஊக்கமளிக்கிறது. தலைவர்களை உற்சாகமூட்டிவிட்டு சென்றிருக்கிறார் அமித்ஷா. பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து சென்றது மகிழ்ச்சியான தருணம். அமித்ஷாவை பொறுத்தவரை நமது தாய்மொழியைத்தான் பிரதானமாக வைக்கவேண்டும் என்கிறார். பொறியியல் படிப்பை தமிழ் வழியில் கொண்டுவர வேண்டும் என அமித்ஷா கூறியுள்ளார். திமுகவை பொறுத்தவரை பாஜகவை எதிரியாக பார்க்கிறார்கள், எங்களை பொறுத்தவரை சித்தாந்த அடிப்படையில் திமுகவை எதிரியாக பார்க்கிறோம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.