ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழவலசை கிராமம் உள்ளது. அங்கு 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். இந்தக் கிராமத்திற்குப் பேருந்து வசதி இல்லாததால் கூலி வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்துக்காக கீழவலசை கிராமத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவிலிருக்கும் செங்கப்படை கிராமத்திற்கோ, ஐந்து கி.மீ தொலைவிலிருக்கும் பேரையூர் கிராமத்திற்கோ நடந்தே சென்று, பஸ் பிடித்து வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்று வந்தனர்.
இந்த ஊர் மக்கள், தங்களது கிராமத்திற்குப் பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாகத் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அந்தக் கிராமத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் ஒட்டுமொத்த கிராம மக்களும் பேருந்து வசதி கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதேபோல் கிராம சபைக் கூட்டத்திலும் தங்கள் கிராமத்திற்குப் பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டுமெனக் கேட்டு தீர்மானம் நிறைவேற்றினர்.

கிராம மக்களின் கோரிக்கைகளை ஏற்று, காலை மற்றும் மாலை இரு வேலைகளில் செங்கப்படை மற்றும் பேரையூர் செல்லும் அரசுப் பேருந்துகள் கீழவலசை கிராமத்தின் வழியாகச் சென்று வர ராமநாதபுரம் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு கீழவலசை கிராமத்திற்குப் பேருந்து வசதி கிடைத்துள்ளது. இதனையடுத்து தங்கள் கிராமத்திற்குள் வந்த அரசுப் பேருந்தைத் தேங்காய் உடைத்தும், ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் குலவையிட்டும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். பள்ளி மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் கைகோத்து பேருந்தைக் கட்டி அணைத்து முத்தமிட்டு வரவேற்றது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.