சிறுத்தை மர்ம சாவு, விவகாரம் தேனி வனத்துறை அதிகாரி முன்பு அதிமுக எம்பி ரவீந்திரநாத் ஆஜர்: 3 மணி நேரம் தொடர் விசாரணை

தேனி: சிறுத்தை மர்மமாக இறந்த விவகாரம் தொடர்பாக தேனி வனச்சரக அலுவலகத்தில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் நேற்று வன அதிகாரி முன் ஆஜரானார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கோம்பை காடு பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மகனும், தேனி அதிமுக எம்பியுமான  ரவீந்திரநாத் மற்றும் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்குள்ள சோலார் மின்வேலியில், கடந்த செப்.28ம் தேதி ஒரு ஆண் சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது தொடர்பாக தொழிலாளி அலெக்ஸ் பாண்டியன், தோட்ட மேலாளர்கள் தங்கவேல், ராஜவேல் ஆகிய 3 பேர் கைதாயினர். தோட்ட உரிமையாளர்களான தேனி எம்பி ரவீந்திரநாத் உள்ளிட்ட மூவரையும் விசாரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக எம்பி ரவீந்திரநாத், காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேனி வனத்துறை சம்மன் அனுப்பியது. இதில் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோர் விளக்கம் அளித்த நிலையில், ரவீந்திரநாத் எம்பி வக்கீல் கடிதம் மூலம் விளக்கம் அளித்தார். ஆனால் அவரே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேனி வனத்துறை கூறியது. இதையடுத்து, தேனி வனச்சரக அலுவலகத்தில் நேற்று, மாவட்ட உதவி வன பாதுகாப்பு அலுவலர் ஷர்மிலி முன்னிலையில்  எம்பி ரவீந்திரநாத் ஆஜராகி விளக்கமளித்தார். காலை 11 மணிக்கு துவங்கிய விசாரணை மதியம் 2 மணி வரை 3 மணி நேரம் நடந்தது.
அப்போது அவர்  தனக்கு எதுவும் தெரியாது எனவும், தோட்டத்தை மேலாளர்கள் தங்கவேலு, ராஜவேலு ஆகியோர் தான் நிர்வகித்து வந்ததாகவும் கூறியதாக தெரிகிறது. தோட்ட மேலாளர்கள் ராஜவேல், தங்கவேல் ஆகியோர் ‘‘நாங்கள் ஊழியர்கள்தான் மேலாளர்கள் இல்லை’’ என ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் முரணாக உள்ளதால் சிறுத்தை மர்ம சாவு விவகாரம் சூடு பிடித்துள்ளது. இது தொடர்பாக, தேனி மாவட்ட உதவி வன பாதுகாவலராக இருந்த மகேந்திரன், திடீரென  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.