பாஜகவில் இணையும் கல்வியாளர் ரமேஷ் பிரபா..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்த அவர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இரவு ஓய்வெடுத்தார். தொடர்ந்து, இந்தியா சிமெண்ட்ஸ் 75ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் இன்று காலை பங்கேற்ற அவர், சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்துக்கு சென்று, தேர்தல் தொடர்பாகவும், கட்சிப் பணிகள் தொடர்பாகவும் ஆலோசிக்கவுள்ளார்.

இந்த நிலையில், கல்வியாளர் ரமேஷ் பிரபா இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னணியில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, நிகழ்ச்சி தயாரிப்பாளராக மாறிய ரமேஷ் பிரபா, சன் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். பின்னர், சன் டிவியில் இருந்து விலகி, கலைஞர் தொலைக்காட்சியின் ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்ற அவர், சில காரணங்களால் அங்கிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து, கல்வி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் வழங்கி வந்த ரமேஷ் பிரபா, கேலக்ஸி என்ற பெயரில் மேலாண்மைக் கல்லூரியையும் நடத்தி வருகிறார். கல்வி ஆலோசகராகவும் விளங்கும் அவர், கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். மீ டூ புகாரிலும் அவரது பெயர் அடிப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

நாடு முழுவதும் காவிக் கொடியை பறக்க திட்டமிட்டு அதற்கான வேலைகளில் பாஜக இறங்கியுள்ளது. வட மாநிலங்கள் பலவற்றையும் தங்களது ஆட்சியின் கீழ் கொண்டு வந்து விட்ட பாஜக, தற்போது தென் மாநிலங்களில் தனது கவனத்தை செலுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து, தெலங்கானா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர கவனம் செலுத்து வரும் பாஜக, எதிர்வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இம்மாநிலங்களில் வலுவாக கால் பதிக்க பல்வேறு திட்டங்களையும் வகுத்து வருகிறது.

அதன்படி, மாற்று கட்சியினர், பிரபலங்கள் உள்ளிட்ட பலரையும் பாஜக தங்களது கட்சியில் இணைத்து வருகிறது. அந்த வரிசையில், தமிழகத்தில் மிகவும் பிரபலமான கல்வியாளர் ரமேஷ் பிரபா, பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், இளைய சமுகத்தினரை எளிதில் அணுக முடியும் என்பது பாஜகவின் திட்டமாக இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே, ஆளுநர் மூலம் மாணவ சமூகத்தினர் மத்தியில் தங்களது சித்தாந்தத்தை திணிப்பதாக மத்திய பாஜக அரசு மீது குற்றம் சாட்டப்படும் நிலையில், மாணவர்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள கல்வியாளர் ரமேஷ் பிரபா, அக்கட்சியில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.