அதிர்ச்சியில் வாந்தி எடுத்த மேலாளர்| Dinamalar

வாஷிங்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும்படி, எலான் மஸ்க் உத்தரவிட்ட பின், அதிர்ச்சி அடைந்த மேலாளர் ஒருவர், அலுவலகத்தின் இருக்கையில் அமர்ந்தபடியே வாந்தி எடுத்ததாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘டுவிட்டர்’ சமூக வலைதள நிறுவனத்தை தொழிலதிபர் எலான் மஸ்க், 3.50 லட்சம் கோடி ரூபாய்க்கு சமீபத்தில் கையகப்படுத்தினார்.

திவால் ஆகிக் கொண்டிருக்கும் நிறுவனத்தை சீரமைக்க, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அறிவித்தார். முதல்கட்டமாக, தலைமை பொறுப்பில் இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். அடுத்தபடியாக, 50 சதவீத பணியாளர்களை வேறு வழியின்றி வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இதன் காரணமாக, 3,738 பேர் வேலை இழந்தனர்.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி கட்டுரை வெளியிட்டது. இதற்காக, டுவிட்டரில்பணியாற்றிய 36 முன்னாள் ஊழியர்களுடன் அவர்கள் பேசி உள்ளனர். மேலும், நிறுவனத்தின், ‘இ -மெயில்’கள், முக்கிய உத்தரவுகள் அடங்கிய ஆவணங்கள், ஊழியர்கள் மத்தியில் பரிமாறிக்கொள்ளப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவை ஆராயப்பட்டுள்ளன.

அதில், நுாற்றுக்கணக்கான ஊழியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்யும்படி, பொறியியல் பிரிவு மேலாளர் ஒருவருக்கு எலான் மஸ்க் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தன் இருக்கையில் அமர்ந்தபடியே வாந்தி எடுத்துள்ளார். எலான் மஸ்கின் அதிரடி உத்தரவுகள் வெளியான நவ., 2ம் தேதி, பல ஊழியர்கள் வீடு திரும்பாமல் இரவு அலுவலகத்திலேயே தங்கி உள்ளனர்.

குறிப்பிட்ட காலத்திற்குள் செய்ய வேண்டிய மாற்றங்கள் நிறைய இருப்பதால், அவர்கள் வீடு திரும்பாமல் இரவு, பகலாக வேலை பார்த்துள்ளனர். இந்த தகவல்களை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.