அடுத்த ஆண்டில் நாட்டில் மக்கள் தொகைமதிப்பீடு

நாட்டின் மக்கள்தொகை மற்றும் குடியிருப்புக் கணக்கெடுப்பு அடுத்த வருடம் முதல் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் முதல் கட்ட வரைபட வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பி.எம். பிரசாத் அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

அதன் இரண்டாம் கட்ட, பட்டியல் எடுப்பதற்காக அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் திட்டம், இம்மாதம் மற்றும் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் ஆதரவு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட்டியல் எடுக்கும் நடைமுறையின் பின்னர், அடுத்த ஆண்டின் முதல் மாதங்களில் நாட்டின் மக்கள் தொகை மற்றும் குடியிருப்புக் கணக்கெடுப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு அனைத்து தனியார் நிறுவனங்களினதும், மக்களினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாக திணைக்கள பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர், 2012 ஆம் ஆண்டு மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இருந்தபோதிலும், கடந்த காலங்களில் கொவிட் தொற்றுநோய் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியவில்லை என்று மக்கள் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.