புதுடெல்லி: நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 100 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஒன்றியத்தில் பாஜ அரசு பதவியேற்றது முதல், சுகாதார மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன்படி, நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வருகிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் புதிய மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.
ஏற்கனவே, 3 கட்டங்களாக 157 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், 93 கல்லூரிகள் செயல்பாட்டுக்கு வந்து விட்டன. மற்ற கல்லூரிகள் கட்டப்பட்டு முடியும் நிலையில் இருக்கின்றன. இவை விரைவில் செயல்பாட்டு வரும் என தெரிகிறது. இந்நிலையில், 4ம் கட்டமாக 2027ம் ஆண்டுக்குள் மேலும் 100 மருத்துவ கல்லூரிகளை அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி, அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 100 மாவட்டங்களில் உள்ள மாவட்ட மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு, மருத்துவக் கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும் அல்லது நிபுணர் குழுவால் பரிந்துரை செய்யப்படும் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படும்.
ஒரு மருத்துவமனைக்கு ரூ.325 கோடி செலவாகும்
ஒரு மாவட்ட மருத்துவமனை அல்லது மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாக மாற்ற ரூ.325 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இதில் ஒன்றிய அரசு 60 சதவீத நிதியும், மாநில அரசு 40 சதவீத நிதியும் வழங்குகின்றன. இந்த தொகைக்கு ஒன்றிய செலவின நிதிக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.