சென்னை: சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கனமழையை எதிர்பார்த்துதான் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். எந்த ஆபத்துகளும் வருவதற்கு வாய்ப்பே கிடையாது’ என்று தெரிவித்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழைபெய்து வருகிறது. இந்நிலையில், வடசென்னை பகுதியில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திரு.வி.க.நகர் மற்றும் கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களும், நீர்நிலைகளின் அருகில் வசிக்கும் குடும்பங்களுக்கு கொசுவலைகளும் வழங்கினார். ஓட்டேரி நல்லா கால்வாயில் மழைநீர் செல்வதை ஸ்ட்ரான்ஸ் சாலை சந்திப்பு மேம்பாலத்தில் இருந்து பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர், மழைநீர் தேங்காமல் தங்கு தடையின்றி செல்வதை உறுதி செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால், மருத்துவ முகாம்களை அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வீனஸ் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வெளியேற்றும் உந்து நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மழை பெய்யுமபோது நீர் தேங்கியிருக்கும். அதன்பிறகு மழை நீர் வடிந்துவிடுகிறது. கனமழையை எதிர்பார்த்துதான் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். எந்த ஆபத்தும்வருவதற்கு வாய்ப்பு இல்லை. எல்லா பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பொதுப்பணித் துறை,நெடுஞ்சாலைத் துறை என அனைத்து அரசுத்துறைகளும் ஒருங்கிணைந்து, சிறப்பாக பணிகளைச் செய்து வருகின்றன. எதிர்க்கட்சிகள்தான் விமர்சனம் செய்கின்றன. இந்த அரசை பொதுமக்கள் பாராட்டுகின்றனர். அதுவே எங்களுக்கு போதும். இன்று இரவு புறப்பட்டு சென்று, நாளை சீர்காழி, மயிலாடுதுறை, கடலூர் போன்ற பகுதிகளை பார்வையிட உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, இரா.கிரிராஜன், சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி, துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.