மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலையில் 16ம் தேதி நடை திறப்பு

திருவனந்தபுரம்: நான்கு வருடங்களுக்குப் பின்னர் பக்தர்களை முழு அளவில் வரவேற்க சபரிமலை தயாராகி வருகிறது. கடந்த 2018 மற்றும் 2019 வருடங்களில் கேரளாவில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 2 வருடமும் சபரிமலையில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் 2 வருடங்களிலும் சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. இதன் காரணமாக கோயில் வருமானமும் குறைந்தது. இதற்கிடையே 4 வருடங்களுக்குப் பிறகு பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்தமுறை மண்டல காலத்தில் சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கம் போல அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும் அதன் மூலம் பக்தர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. முன்கூட்டி ஆன்லைனில் முன்பதிவு செய்யமுடியாத பக்தர்களுக்காக கேரளாவில் நிலக்கல் உள்பட 13 இடங்களில் உடனடி முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. தினசரி பக்தர்கள் எண்ணிக்கையிலும் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. எனவே ஒரு நாளில் எத்தனை பக்தர்கள் வேண்டுமென்றாலும் தரிசனம் செய்யலாம்.

நாளை மறுநாள் (16ம் தேதி) இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. 41 நாள் நீளும் மண்டல காலம் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. பக்தர்கள் வசதிக்காக திருவனந்தபுரம், கொல்லம், செங்கனூர், கோட்டயம் உள்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 4 வருடங்களுக்குப் பிறகு இந்த முறை புல்மேடு, கரிமலை, நீலிமலை ஆகிய 3 வனப்பாதைகள் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலையில் பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் தயாராக உள்ளன. 16ம் தேதி முதல் இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்குகிறது. சன்னிதானம், பம்பை உள்பட இடங்களில் மருத்துவமனைகளும் திறக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.