மும்பை: தான்சானியா நாட்டிலிருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்த 4 இந்தியர்களை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர்களது பெல்ட்-களில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ரூ.28.17 கோடி மதிப்பிலான, 53 கிலோ தங்கக் கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். நால்வரும் கத்தார் தலைநகர் தோஹா வழியாக தான்சானியாவிலிருந்து மும்பை வந்துள்ளனர். சூடானைச் சேர்ந்த ஒருவர், தோஹாவில் அந்த பெல்ட்களை கொடுத்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதேபோல, துபாயிலிருந்து வந்த 3 பயணிகள் கடத்திக் கொண்டு வந்த, ரூ.3.88 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. அவர்களில் இருவர் பெண்கள். ஒரு பெண் 60 வயதுக்கு மேற்பட்டவர்.
மும்பை சத்ரபதி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.32 கோடி மதிப்பிலான, 61 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்றும், கடத்தல் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.