கால்பந்து, சீருடையுடன் மாணவி பிரியாவின் உடல் நல்லடக்கம்

சென்னை: கால்பந்து மற்றும் சீருடையுடன் சென்னை மாணவி பிரியாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மருத்துவர்களின் கவனக்குறைவால் கால்பந்தாட்ட மாணவி பிரியா இன்று (நவ.15) ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கவனக்குறைவாக செயல்பட்ட பெரியார் நகர் புறநகர் மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாணவியின் உடல் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டிற்கு மாணவியின் உடல் எடுத்து செல்லப்பட்டது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலுக்கு பொதுமக்கள், கால்பந்தாட்ட வீராங்கனைகள், மாணவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதன்பிறகு மாணவி பிரியாவின் உடல் வியாசர்பாடியில் இருந்து கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கல்லறைத் தோட்டத்தில் கால்பந்து, விளையாட்டு சீருடை, வளையல் ஆகியவை சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, மாணவி பிரியாவுக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்த மருத்துவர் சோமசுந்தரம், பால் ராம் சங்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 2 மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து மருத்துவ கல்வி இயக்குநர் சாந்திமலர் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட சோம சுந்தரம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கு பணி மாற்றம் செய்யப்பட்ட பால் ராம் சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்தி மலர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மாணவி பிரியா மரணம் அடைந்தது மிக மிக துயரமான சம்பவம். இதை அரசியல் ஆக்கக் கூடாது. மாணவி பிரியாவுக்கு ஏற்கெனவே ஓராண்டுக்கு முன்பு காலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 2 வாரத்திற்கு முன்பு அதேபோன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 7-ம் தேதி பெரியார் நகரில் புறநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று வரை அந்தக் குழந்தை நன்றாகத்தான் பேசிக் கொண்டு இருந்தாக அவரது பெற்றோர்கள் என்னிடம் தெரிவித்தனர். குழந்தையின் இறப்பை யாரும் அரசியலாக பார்க்கக் கூடாது. தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது சரியான விஷயம் அல்ல. அரசியல் நோக்கத்தோடு எதையாவது கிளறி விடுவது என்பது அரசியல் தலைவர்களுக்கு சரியாக இருக்காது என்று நான் கருதுகிறேன்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கால்பந்து வீராங்கனை – மாணவி பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதன் விவரம்: கால்பந்து வீராங்கனை பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம் என்ன? – மருத்துவர்கள் விளக்கம்

பிரியாவின் தந்தை உருக்கம்: “சின்ன அறுவை சிகிச்சை என்பதால்தான், பெரியார் நகர் மருத்துவமனைக்கு முதலில் சென்றோம். அப்போது என் மகள் நடந்துதான் வந்தாள், இப்போது எனது பிள்ளையே போய்விட்டது சார்” என்று பிரியாவின் தந்தை உருக்கமாக கூறினார். வாசிக்க > ‘நடந்துவந்த மகள்… இப்போது உயிரோடு இல்லை’ – வீராங்கனை பிரியாவின் தந்தை உருக்கம்

அதிமுக சரமாரி குற்றச்சாட்டு: “மாணவி பிரியாவை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் ஏன் சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை? யார் அனுமதி மறுத்தது? அதற்கு யார் காரணம்? மாணவியை அங்கிருந்து திருப்பி அனுப்பியது யார்? எனவே இந்தக் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்கள் குறித்து ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். முழு விவரம்: பிரியா மரணம் | “மருத்துவத் துறை சீரழிந்துள்ளதற்கு உதாரணம்… விசாரணை ஆணையம் அமைப்பீர்” – ஜெயக்குமார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.