சேலம்: ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதால், 17 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்1 மாணவி, கடந்த மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
அதில், அதேபகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர், சிறுமியுடன் பழகி வந்துள்ளார். ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் ெசய்து கொண்டார். அன்றிரவு அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, போட்டோ, வீடியோ எடுத்துள்ளார். இந்நிலையில் போலீசார் மணிகண்டனுடன் இருந்த சிறுமியை மீட்டு அவருக்கு அறிவுரை வழங்கி, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த மாதம் மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது மணிகண்டனின் தந்தை மற்றும் அவரது தம்பி மகன் ஆகியோர் வந்து, உனக்கு 18 வயதானவுடன் யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் உன்னை அழைத்துச் சென்று விடுவோம் என்றும், மறுத்தால் ஆபாசமாக இருக்கும் படத்தை வெளியிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மீண்டும் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து மணிகண்டனின் தந்தை மற்றும் அவரது தம்பி மகன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் மணிகண்டன் தரப்பில் இருந்து மாணவிக்கு மிரட்டல் வந்துள்ளது. இதனால் வருத்தத்தில் இருந்த மாணவி, கடந்த தீபாவளியன்று திடீரென விஷம் குடித்து விட்டார். அவரை பெற்றோர் மீட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீரகனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவியின் உடல்நிலை நேற்று முன்தினம் மோசமானதால் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மாணவி உயிரிழந்தார். இதனை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிபிஎம் மற்றும் மாதர் சங்கத்தினர், மாணவியின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த மருத்துவமனை போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து மாணவியின் பெற்றோர் கூறும்போது, ‘‘மகளை மணிகண்டன் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார். அவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம்’’ என்றனர். இதனால் மாணவியின் உடல் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.