புதுடில்லி :நாடு முழுதும், 51 முன்னாள், இன்னாள் எம்.பி.,க்கள் மீது பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ளதாக, அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘நாடு முழுதும் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணையை விரைவு படுத்த உத்தரவிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
முன்னாள், இன்னாள் எம்.பி.,க்கள், 51 பேருக்கு எதிராக பணப்பரிமாற்ற மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவை நிலுவையில் உள்ளன.
இதுபோல், பல்வேறு மாநிலங்களின் எம்.எல்.ஏ.,க்கள் – எம்.எல்.சி.,க்கள் 71 பேர் மீதும் இது தொடர்பான வழக்குகள்விசாரணையில் உள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீது, 121 வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்துள்ளதாகவும், இந்த வழக்குகளின் விசாரணை நடந்து வருவதாகவும் சி.பி.ஐ., தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரிகா தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ‘இந்த வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வந்தாலும், மக்கள் பிரதிநிதிகள் மீதான பல வழக்குகள், தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடு?
அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் பேச்சு மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமைக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘மக்கள் பிரதிநிதிகளின் நடத்தை தொடர்பாக நாங்கள் எப்படி விதிமுறை வகுக்க முடியும்.
‘சட்டம் இயற்றும் அதிகாரத்தை பார்லி.,யிடம்இருந்து நாங்கள் எடுத்துக் கொண்டதாக ஆகி விடாதா’ என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்