திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள மகளிர் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இரண்டு மாணவிகள், நந்தவனப்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 2 மாணவிகள் என்று மொத்தம் நான்கு பேரும் நெருங்கிய தோழிகளாக இருந்தனர். இந்நிலையில், இவர்கள் அனைவரும் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்தனர். ஆனால், அன்று மாலை நான்கு பேரும் வீடு திரும்பவில்லை.
இதனால், அவர்களது பெற்றோர்கள் பதறி அடித்துக்கொண்டு பள்ளிக்கு வந்து விசாரித்ததில், அவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்று தெரிவித்தனர். பின்னர் சக,மாணவிகளிடம் விசாரித்ததில், அவர்கள் அனைவரும் எங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து, மாணவிகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதற்கிடையே மாணவிகள் நான்கு பேரும் கரூரில் இருப்பதாக, அந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி. மூலம் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் பேரில் கரூருக்குச் சென்ற திண்டுக்கல் போலீசார் கரூர் பேருந்து நிலையத்தில் இருந்த நான்கு மாணவிகளையும் திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் துணை தலைமை காவலர் சித்திக் மற்றும் அனைத்து மகளிர் போலீசார் மீட்டு வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவிகளிடம் விசாரணை செய்ததில், “குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தாங்கள் வெளியே எங்கேயாவது செல்லலாம் என்று முடிவெடுத்ததாகவும் அதன்படி நான்கு பேரும் பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து திண்டுக்கல் செல்வதற்காக பழனி பேருந்து நிலையத்திற்கு வந்ததாகவும், அங்கு திண்டுக்கல்லுக்கு பேருந்து இல்லாததால் அங்கிருந்த கரூர் பேருந்தில், ஏறி பின்னர் வழி தெரியாமல் தவித்த தங்களுக்கு அங்கிருந்த போலீசார் உதவி செய்து அனுப்பி வைத்ததாகவும்” தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, சமூக நலத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, அந்த நான்கு மாணவிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பின்பு, இனி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரைகள் கூறி அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.