திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல கால பூஜைக்காக நேற்று மாலை சரண கோஷம் முழங்க கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் 2 வருட இடைவெளிக்குப் பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத ஒரு மண்டல காலம் இன்று முதல் தொடங்குகிறது. இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்தினார். வேறு எந்த பூஜைகளும் நேற்று நடைபெறவில்லை. இரவு 7 மணியளவில் சபரிமலை மேல்சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரியும், மாளிகைப்புரம் மேல்சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரியும் பொறுப்பேற்றனர். இன்று முதல் அடுத்த ஒரு வருடத்திற்கு இவர்கள் இப்பதவியை வகிப்பார்கள்.
நடை திறந்த சிறிது நேரத்திலேயே சபரிமலையில் பலத்த மழை பெய்தது. அதை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 2 மணி நேரத்திற்கு மேல் மழை கொட்டித் தீர்த்தது. இன்று முதல் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கும். பிற்பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை சாத்தப்படும்.
நடைதிறக்கப்பட்ட நேற்று முதலே சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கார்த்திகை 1ம் தேதியான இன்று ஐயப்பனை தரிசிப்பதற்காக, நேற்று இரவே பக்தர்கள் குவிந்தனர். இன்று முதல் 41 நாள் நீளும் மண்டல காலம், டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் மண்டல பூஜையுடன் நிறைவடையும். இதற்காக, சபரிமலையில் ஒரு எஸ்பி தலைமையில் 12 டிஎஸ்பிகள், 30 இன்ஸ்பெக்டர்கள், 110 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1250 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர கமாண்டோ வீரர்களும் குவிக்கப்பட்டு உள்ளனர்.