“ரெயின் கோட்” ஆடு !- விவசாயி செயலால் ஆடுகளுக்கு பாதிப்பில்லை கால்நடை விஞ்ஞானி விளக்கம்..!

ஒரத்தநாட்டை சேர்ந்த விவசாயி, தான் வளர்க்கும் ஆடு மழையில் நனையாமல் ”ரெயின் கோட்” அணிவித்து மேய்ச்சலுக்கு அனுப்பி வரும் செயல் பாராட்டக்கூடியது. சாக்கினை அணிவிப்பதால் ஆடுகளுக்கு சிரமம் மற்றும் உடல் நல பாதிப்பும் ஏற்படாது என கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.

கால்நடை விஞ்ஞானி புண்ணியமூர்த்தி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கணேசன். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பில் ஆர்வமாக ஈடுப்பட்டு வருகிறார். மேய்ச்சலுக்கு செல்லும் சமயத்தில் மழை பெய்தால் அதில் ஆடு நனைவதை விரும்பாத கணேசன் தன்னிடம் இருந்த அரிசி சாக்கினை ரெயின் கோட்டாக்கி அதனை ஆடுகளுக்கு அணிவித்தார்.

ஆடு, ”ரெயின் கோட்” அணிந்து மேய்ச்சலுக்கு சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. விவசாயி கணேசன் செயலை பலரும் பாராட்டினர். அந்தந்த கால சூழலுக்கேற்ப உடல் அமைப்புகள் இருக்கும் எனவே இது வேண்டாத வேலை ஆடுகளுக்கு சிரமத்தை தரக்கூடிய செயல் எனவும் சிலர் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

மேய்ச்சலில் ஆடுகள்

ஆடுகளுக்கு சாக்கினை அணிந்து விடுவதால் அவற்றின் உடலுக்கு பாதிப்பு ஏற்படுமா, விவசாயின் செயல் சரிதானா என்பது குறித்து முன்னாள் பேராசிரியரும் கால்நடை மூலிகை மருத்துவ விஞ்ஞானியுமான முனைவர் புண்ணியமூர்த்தியிடம் கேட்டோம்,”கால்நடைகளான ஆடு, மாடு உள்ளிட்டவற்றை வளர்க்கும் போது அவைகளுடைய உடல் நலன் மற்றும் விருப்பத் தேவை ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக ஆடு, மாடு ஆகியவற்றை கட்டியே வைத்திருக்க கூடாது. இருப்பதற்கு, நடமாடுவதற்கு போதுமான இடவசதி, குடிக்க தண்ணீர் என அவை விருப்பபடக் கூடிய தேவைகள் நிறைவேற்றி கொடுக்கப்பட்டால் அவை மகிழ்ச்சியாக இருக்கும்.

கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் இவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரத்தநாட்டை சேர்ந்த விவசாயியான கணேசன் தான் வளர்க்கும் ஆடுகள் மீது கொண்ட அக்கறையில் ஆடு மேய்ச்சலுக்கு செல்லும் போது மழையில் நனையாமல் இருக்க அரிசி சாக்கை ஆடுகளுக்கு ரெயின் கோட்டாக அணிவித்து வருகிறார்.

ஆடு

அவருடைய இந்த செயல் வரவேற்க்கதக்கது பாராட்டுக்குறியது. பொதுவாக வெள்ளாடுகளுக்கு தண்ணி என்றாலே ஆகாது. தன் உடம்பு தண்ணீர் பட்டு நனையக்கூடாது என்பது அவைகளுடைய விருப்பம். எனவே ஆடு மழையில் நனைவதை துளியும் விரும்பாது. ஈரமாக இருக்க கூடிய புல்களையும் மேயாது. குறிப்பாக மழைகாலம் ஆடுகளுக்கு ஆகாது என்றே கூறலாம்.

அடைமழை காலத்தில் ஆடு, மாடு இல்லாதவர்கள் ராஜா, பஞ்ச காலத்தில் புள்ளைக்குட்டி இல்லாதவர்கள் ராஜா என்கிற சொலவடை உண்டு. மழை காலங்களில் ஆடு உள்ளிட்ட கால் நடைகளை பாதுகாப்பது என்பது சவால் நிறைந்தது. அந்த காலத்தில் அவற்றிற்கு வரும் ஆபத்துகளிலிருந்து காப்பதும் வளர்ப்பில் ஈடுப்படுபவர்களின் கடமையாகும்.

`ரெயின் கோட்’ – ஆடு

அந்த வகையில் தான் வளர்க்கும் செல்ல பிராணியான ஆடு மழையில் நனைவதை விரும்பாத கணேசன், ஆடுகளுக்கு ரெயின் கோட் அணிவித்து வருகிறார். இதனால் மழை பெய்தால் ஆடு உடல் நனையாது. மழைக்கு குடை பிடிப்பது போல் தான் இவையும் ஆடு தலை மட்டும் நனையும். ஆனால் உடல் நனையாததை ஆடுகள் நிச்சயமாக விரும்பும்.

கொசு கடிக்காமல் இருக்கவும், ஈரத்தில் படுக்காமல் இருக்கவும் ஆடுகள் இரவில் படுக்கும் போதும் சாக்கினை உடையாக அணிந்து விடுகிறார். ஈரத்தரையில் படுப்பது ஆடுகளுக்கு பிடிக்காத ஒன்று எனவே அவற்றையும் ஆடு விரும்பும். ஒத்த பைசா செலவில்லாமல் தன்னிடம் இருக்கும் சாக்கு மற்றும் சணல் பயன்படுத்தி ஆடுகளுக்கு ரெயின் கோட் அணிவிக்கும் அவருடைய யோசனையே பெரும் பாராட்டுக்குறியது.

ஆடு

இதனால் ஆடுகள் எந்த விதமான சிரமத்துக்கும் ஆளாவதற்கு வாய்ப்பில்லை. அத்துடன் சாக்கினை அணிவிப்பதால் அதன் உடல் நலத்திற்கும் பாதிப்பை ஏற்ப்படுத்தக் கூடிய சாத்திய கூறுகள் இல்லை. தான் வளர்க்கும் ஆடு மழையில் நனையாமல் இருக்க விவசாயி கணேசன் எடுத்த முயற்சிகள் பாராட்டக் கூடியது. ஆடுகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்கிற அவருடைய எண்ணமும் போற்றப்பட வேண்டியது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.