'பிரியா மரணத்திற்கு மா.சுப்பிரமணியன் பொறுப்பேற்கணும்!'- அண்ணாமலை பேட்டி!

“கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொறுப்பேற்க வேண்டும், ” என, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

தவறான சிகிச்சை
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி பிரியா. கால்பந்து வீராங்கனையான இவர், பயிற்சியின் போது காலில் ஜவ்வு விலகியதை அடுத்து சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சை முறையினால் இரண்டு கால்களும் அகற்றப்பட்டு, அதன் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவரின் தவறான சிகிச்சையால் பிரியா உயிரிழந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

முதல்வர் நேரில் ஆறுதல்
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. உயிரிழந்த மாணவி பிரியாவின் வீட்டிற்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரியாவின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை, பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலைக்கான ஆணை, வீடு ஆகியவற்றை வழங்கினார்.

அண்ணாமலை பேட்டி
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, கால் பந்தாட்ட வீராங்கனை பிரியா குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கால்பந்து வீராங்கனை பிரியாவின் இழப்பு என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத இழப்பு. தமிழகத்தில் இதற்கு முன் இப்படி பார்த்தது கிடையாது. குறிப்பாக மருத்துவ கட்டமைப்பு இந்தியாவிலேயே நன்றாக இருக்கக் கூடிய மாநிலம் தமிழகம் தான். இந்த மருத்துவமனை முதலமைச்சர் தொகுதியில் இருப்பது வேதனையாக இருக்கிறது. பல அரசு மருத்துவமனைகள் இது போன்ற நிலையில் உள்ளன. எத்தனையோ அரசு மருத்துவமனைகளில் நிர்வாகக் கோளாறுகளால் ஏற்படும் உயிரிழப்புகள் வெளி வருவதில்லை. அதையெல்லாம் மாநில அரசு இரும்புக்கரம் கொண்டு மருத்துவ கட்டமைப்பை மீட்டெடுக்க வேண்டும்.

கால் பந்து போட்டி

கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட பிரியாவின் நினைவாக பாஜக சார்பாக சென்னையில் கால் பந்தாட்ட போட்டியை நடத்தி காட்டுவோம். இதற்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரை அழைத்து வந்து, மிகப்பெரிய கவுரவத்தை கால் பந்தாட்ட வீராங்கனைகளுக்கு வழங்குவோம். அதேபோல் பிரியாவின் சகோதரர்கள் கால் பந்து விளையாடுகிறார்கள்.

அவர்கள் அடையாளம் காட்டும் 10 கால் பந்தாட்ட வீராங்கனைகளுக்கு பாஜக சார்பாக ஊக்கத்தொகை வழங்கப்படும். அதே போல் அந்த 10 வீராங்கனைகளும் எந்த கால் பந்து அகாடமியில் இணைந்தாலும், அதற்கான முழு செலவையும் பாஜக ஏற்றுக் கொள்ளும். இதற்கு காரணம், ஒரு பிரியா இறந்து விட்டார். அவருக்கு இணையாக 10 பிரியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட உள்ளோம்.

அரசு பொறுப்பேற்க வேண்டும்
உத்தர பிரதேச மாநிலத்தை விட வளர்ந்த மாநில என்று சொல்லக் கூடிய அமைச்சர் மா.சுப்பிரமணியனால் வெட்கி தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம். முதலமைச்சரின் சொந்த தொகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.