தமிழ் சினிமாவில் மண் வாசனை மிகுந்த படங்கள் வருவது தற்போது குறைந்து வருகிறது. இந்நிலையில் அந்த இடத்தை நிரப்ப பேட்டைக்காளி என்ற வெப் தொடர் உருவாகி உள்ளது. ஆஹா தமிழ் ஓடிடியில் இதுவரை 4 எபிசோட் வாரம் ஒன்றாக வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான அனைத்து எபிசோடும் ஹிட் அடித்துள்ளது. கிஷோர் குமார், ஷீலா ராஜ்குமார், லவ்லின் சந்திரசேகர், கலையரசன், வேல ராமமூர்த்தி, ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாரத்தில் நடித்து உள்ளனர். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இந்த தொடர் உருவாக்கபட்டுள்ளது.
ஊர் பண்ணையாராக இருக்கும் வேல ராமமூர்த்தி ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். பக்கத்து ஊர் மக்களுக்கும் இவரது ஊருக்கும் பல காலங்களாக பகை இருந்து வருகிறது. பக்கத்து ஊரில் கிஷோர் மற்றும் அவரது அக்கா மகனாக கலையரசன் வசித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டில் வேல ராமமூர்த்தியின் மாட்டை யாரும் பிடிக்க கூடாது என்று தண்டோரா போடப்படுகிறது. இதனை மீறி கலையரசன் ஜல்லிக்கட்டியில் மாட்டை பிடித்து விடுகிறார். இதனால் இரு ஊருக்கும் பகை உண்டாகிறது. பிறகு என்ன ஆனது என்பதே இதுவரை வெளியாகி உள்ள எபிசோட்களில் காட்டப்பட்டுள்ளது.
படத்தின் கதையை தாண்டி, இப்படி ஒரு திரைகதையை எப்படி படமாக எடுத்தனர் எனபது தான் ஆச்சரியப்படுத்துகிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டு சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள விதம் தரம். நிஜமாகவே ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு சென்று படமாக்கி உள்ளனர். பேட்டைக்காளி வெப் தொடரின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்க்கு விருது நிச்சயம். கலையரசன் ஒரு மாடு புடி வீரராகவே வாழ்ந்துள்ளார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். இவரது மாமாவாக வரும் கிஷோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். நெகடிவ் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி வழக்கம் போல மிரட்டி உள்ளார்.
இவர்களை தாண்டி சிறு சிறு கதாபாத்திரத்தில் வரும் ஷீலா, கௌதம், பால ஹாசன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஷீலாவிற்கு இனி வெளியாகும் தொடர்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. ஒவ்வொரு எபிசோடும் முடியும் போது உடனடியாக அடுத்த எபிசோடை பார்க்க தூண்டும் வகையில் உள்ளதே பேட்டைக்காளிக்கு கிடைத்த வெற்றி. சந்தோஷ் நாராயணன் இசையில் பின்னணி இசை தெரிக்கிறது. மற்ற மொழி படங்களை ஓடிடியில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், தமிழில் வெளியாகி உள்ள பேட்டைக்காளியை நிச்சயம் பார்த்து கொண்டாடலாம்.