சிலிகுரி: மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர்.
மேற்கு வங்கத்தில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நிதின் கட்கரி, சிலிகுரியில் நடைபெற்ற ரூ.1,206 கோடி மதிப்பிலான 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பாஜக எம்.பி. ராஜூ பிஸ்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, நெடுஞ்சாலைத் துறையின் இந்தத் திட்டங்கள் நிறைவடையும்போது இப்பகுதியில் நிகழும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் என்றும், பயண தூரம் மிகவும் குறையும் என்றும் தெரிவித்தார். மேலும், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், சிக்கிம், பூட்டான் இடையேயான சாலைகள் மேம்பாடு அடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் மேற்கு வங்கத்தின் தொழில்துறை வளர்ச்சி, விவசாய வளர்ச்சி ஆகியவற்றுக்கு வித்திடும் என்றும், இதன்மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்றும் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார். மேற்கு வங்கத்தின் சாலை இணைப்புகளை வலுப்படுத்தவும், மேற்கு வங்கத்தின் செழிப்புக்கு உதவவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதிபூண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சி முடிந்ததும், தான் மிகவும் சோர்வாக உணர்வதாக நிதின் கட்கரி அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவரது உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. உடலில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்ட நிதின் கட்கரி, பின்னர் டார்ஜிலிங்கில் உள்ள பாஜக எம்.பி. ராஜூ பிஸ்டாவின் இல்லத்திற்கு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.