கட்சி மாறப்போகிறாரா மாவட்ட தலைவர்? தூத்துக்குடி காங்கிரஸில் மல்லுகட்டு!

பதவியை ராஜினாமா செய்த மாவட்ட தலைவருக்கு எதிராக

கட்சியினர் போர்கொடி தூக்கியுள்ளனர். கட்சி மாறபோவதால் தலைமையை விமர்சனம் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக இருந்த காமராஜ் நேற்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னிச்சையாக செயல்படுவதாகவும், மாவட்ட தலைவர்களை கலந்து ஆலோசனை செய்வது கிடையாது, பணம் வாங்கி கொண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களை கூறி தனது மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்நிலையில் கட்சியில் மற்றொரு தரப்பு நிர்வாகிகள் மாநில தலைவர் பற்றி குறை சொல்லியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மகேஸ்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, “உள்கட்சி தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெற்றது. பதவியை ராஜினாமா செய்த வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் தேர்தல் அதிகாரிகளுக்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை, மேலும் கட்சிக்கு ஒரு உறுப்பினரை கூட அவர் சேர்க்கவில்லை. காமராஜ் ராஜினாமா உள்நோக்கம் கொண்டது. அவர் கட்சி மாற போவதாக தெரிவதால் கட்சி தலைமைக்கு எதிராக பேசியுள்ளார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அப்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகி கே.ஆர்.எஸ். பொன்னுச்சாமி பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் முத்து, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ராஜா, கோவில்பட்டி ஒன்றிய தலைவர் ரமேஷ்மூர்த்தி, கயத்தார் ஒன்றிய தலைவர் செல்லத்துரை, வடக்கு மாவட்ட சேவதள தலைவர் சக்தி விநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.