கல்லூரி ஆய்வகத்தில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 30க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் செகந்திராபாத் பகுதியில் உள்ள மேற்கு மாரேட்பள்ளியில் கஸ்தூரிபா காந்தி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் ஆய்வகத்தில் நேற்று வாயு கசிவு ஏற்பட்டது.
இதில், 30க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகளை அப்பகுதி மக்களின் உதவியுடன் கல்லூரி ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனிடையே, கல்லூரி ஆய்வகத்தில் இருந்து வாயு கசிவு ஏற்படவில்லை என கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘கல்லூரி அருகே உள்ள குப்பை கிடங்கில் இருந்து வந்த துர்நாற்றம் காரணமாகவே மாணவர்கள் நோய் வாய்ப்பட்டனர்’ எனத் தெரிவித்தனர்.
ஆனால், ஆய்வகத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்ததையடுத்து, கல்லூரி நிர்வாகம் வளாகத்தை ஆய்வு செய்தது. எரிவாயு கசிவு இல்லை என தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.