இந்திய – பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவும், பனிச் சரிவும் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று, கட்டுபாட்டுக் கோடு பகுதி அருகே உள்ள குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட மாச்சில் செக்டாரில் ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைபிள் படைப்பிரிவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
இதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் சிலர் சிக்கிக்கொண்டனர். அதில் 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 3 வீரர்களின் உடல்களை மீட்டனர். அவர்களின் விவரம் குறித்து இன்னும் தகவல் இல்லை. இந்த சம்பவம் குறித்து குப்வாரா மாவட்ட மூத்த போலீஸ் அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து குப்வாரா மாவட்ட மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாச்சில் செக்டாரில் பணியில் இருந்த 3 ராணுவ வீரர்கள் ஒரு துரதிர்ஷ்டவசமான பனிச்சரிவில் சிக்கி உயிர்த் தியாகம் செய்துள்ளனர்’ எனத் தெரிவித்தார்.