சாலையோரம் கடை போட்டிருந்த தந்தையை போலீஸ்காரர் அறைந்ததால் நீதிபதியான மகன்!: பீகார் இளைஞனின் வெற்றிக் கதை

சஹர்சா:டெல்லியில் சாலையோரம் கடை போட்டிருந்த தந்தையை போலீஸ்காரர் ஒருவர் அறைந்ததால், விடாமுயற்சியுடன் போராடி அவரது மகன் நீதிபதியான வெற்றிக் கதை பீகாரில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டம் சத்தூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் யாதவ், கடந்த சில ஆண்டுகளுக்கு வறுமையின் காரணமாக டெல்லிக்கு குடிபெயர்ந்தார். அங்கு சாலையோரம் கடை அமைத்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

ஒரு நாள் போலீஸ்காரர் ஒருவர், சாலையோரம் கடை போட்டதற்காக சந்திரசேகர் யாதவை அறைந்தார். அதனை அவரது மகன் கமலேஷ் குமார் பார்த்து. அதிர்ச்சியடைந்தார். அவர் தனது தந்தையிடம், ‘அப்பா, இவர்கள் (போலீஸ்காரர்கள்) யாரை பார்த்து அதிகம் பயப்படுவார்கள்?’ என்று கேள்வி கேட்டார். அதற்கு தந்தை, ‘இவர்கள் நீதிபதியை பார்த்துதான் பயப்படுவார்கள்’ என்றார். தனது தந்தையின் கூற்றை மனதில் பதிய வைத்துக் கொண்ட கமலேஷ் குமார், விடாமுயற்சியுடன் படிக்க ஆரம்பித்து, பீகார் மாநில நீதித்துறை தேர்வில் 64வது ரேங்க் பெற்று தேர்ச்சியடைந்தார்.

தற்போது சந்திரசேகர யாதவின் குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளது. உள்ளூர் மக்கள் கமலேஷ் குமாரை தூக்கிவைத்து கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து கமலேஷ் குமார் கூறுகையில், ‘பீகாரில் பிறந்த நான், எனது தந்தை வறுமையின் காரணமாக டெல்லியில் வாழ்ந்தேன். எனது குழந்தைப் பருவத்தை டெல்லியின் சேரிகளில் கழித்தேன்.

8ம் வகுப்பு படிக்கும் போது எங்களது குடிசை வீடும் சேதமடைந்தது. அதன்பிறகு வாடகை வீட்டில் வசித்து வந்தோம். எனது தந்தையை போலீஸ்காரர் ஒருவர் அறைந்தார்; இந்த சம்பவத்தால் நான் பெரிதும் கலக்கமடைந்தேன். அதனால்தான் நான் நீதிபதி ஆனேன். எந்த சூழ்நிலையிலும் அல்லது பின்னணியிலும், நாம் கடினமாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றிபெற முடியும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.