அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் டொனால்டு ட்ரம்ப்பை வீழ்த்தி அமெரிக்க அதிபரானார். அப்போது ஜோ பைடனுக்கு எதிராக ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் பல பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதையடுத்து மோதலை ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் அவதூறாகக் கருத்துகள் பதிவிட்டு வந்ததாகக் கூறி ட்விட்டர் நிறுவனம் சுமார் ஒன்பது கோடிப் பேரால் பின்தொடரப்பட்டு வந்த ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியது.
இதைத் தொடர்ந்து, ஃபேஸ்புக் மற்றும் கூகுளின் யூடியூபிலிருந்தும் ட்ரம்ப்பின் கணக்குகள் முடக்கப்பட்டன. இதையடுத்து ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்குப் போட்டியாக டொனால்டு ட்ரம்ப் புதிதாக ‘TRUTH’ என்னும் புதிய சமூகவலைதள செயலியை அறிமுகப்படுத்தினார்.
Reinstate former President Trump
— Elon Musk (@elonmusk) November 19, 2022
ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதுமே, ட்ரம்ப் மீண்டும் ட்விட்டரில் அனுமதிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை (19.11.2022) எலான் மஸ்க் ட்விட்டரில் ஒரு வாக்கெடுப்புக்கான கேள்வியைப் பகிர்ந்துள்ளார். அதில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பை மீண்டும் ட்விட்டரில் அனுமதிக்கலாமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். கிட்டத்தட்ட 11 மில்லியன் பேர் இதற்கு வாக்களித்த நிலையில் 52 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ட்ரம்பு மீண்டும் ட்விட்டருக்கு வரவேண்டும் என அவருக்கு ஆதரவாகப் பதில் அளித்துள்ளனர். இதனால் ட்ரம்ப் மீதான ட்விட்டர் தடை நீங்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வருகிறது.