பெங்களூரு:பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான நாய் கண்காட்சியில், 57 இனங்களின் 573 நாய்கள் இடம் பெற்றிருந்தன. 5,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்று ரசித்தனர்.
செல்ல பிராணியான நாய்களை தங்கள் பிள்ளைகள் போன்று பலர் வளர்க்கின்றனர். பால், மாமிசம் என வித விதமான உணவு வழங்கி பராமரிக்கின்றனர்.
நாய்களும் நன்றியுடன், வளர்ப்பவர் பின்னால் வாலாட்டி செல்லும். சிலர் தங்கள் நாய்களுக்கு பல்வேறு விதமான யுத்திகளை சொல்லி கொடுத்து, பழகு வைத்திருப்பர்.

இந்த வகையில் பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் சாலையில் உள்ள கேனைன் கிளப் மற்றும் சிலிகான் சிட்டி கென்னல் கிளப் இணைந்து ‘கிரவுன் கிளாசிக் டாக் ேஷா’ எனும் நாய் கண்காட்சி எலஹங்கா அருகிலுள்ள ஹீரா தோட்டத்தில் துவங்கியது.

அண்டை மாநிலங்கள்
கொரோனாவுக்கு பின், நாட்டில் நடக்கும் மிகப்பெரிய நாய் கண்காட்சி இதுவாகும். ஒரே நாளில், 5,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
5,000 முதல் 20 லட்சம் ரூபாய் வரையிலான நாய்கள் இருந்தன. தமிழகத்தின் ராஜபாளையம் கன்னி, கர்நாடகாவின் முத்தோல், ஜெர்மன் ெஷப்பர்டு, டாபர்மென், கிரேட் டேன் உட்பட நாடு முழுதுமிருந்து 57 இனங்களை சேர்ந்த 573 நாய்களும், ரஷ்யாவிலிருந்தும் நாய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.

‘குரூப் ஏ’, ‘குரூப் பி’ என 11 பிரிவுகளில் கண்காட்சி நடத்தப்பட்டன. ஒவ்வொரு போட்டியிலும், வளர்ப்பு, அழகு, பற்கள், காதுகள், கால்கள், எலும்புகள் என உடல் வாகையை பரிசோதித்து தேர்வு செய்யப்பட்டன.கனடா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த சர்வதேச வல்லுனர்கள், சிறந்த நாய்களை தேர்வு செய்து பதக்கமும், சான்றிதழும் வழங்கினர்.
தமிழகத்தின் சென்னை, மதுரை, கோவை மற்றும் புதுச்சேரி உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன.

இன்று காலை வேறு பிரிவுகளில் கண்காட்சி நடக்கவுள்ளது. வார விடுமுறை என்பதால், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.நாய்களை வளர்ப்பதற்கு தேவையான உணவு, மருத்துவ முறை அடங்கிய ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன. சிறுவர் முதல், பெரியவர்கள் வரை திரளானோர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்