தேர்தல் பணிகளில் இருந்து ‘பப்ளிசிட்டி’ ஐஏஎஸ் அதிகாரி நீக்கம்: போஸ் கொடுத்த போட்டோவால் வந்த வினை

அகமதாபாத்: குஜராத் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், பப்ளிசிட்டிக்காக தனது புகைப்படத்தை வெளியிட்டதால் அவரை தேர்தல் பணியில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், அகமதாபாத்தில் உள்ள பாபுன்நகர் மற்றும் அஸ்வாரா என்ற இரு தொகுதிகளில் அபிஷேக் சிங் என்ற ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பதிவுகளை போட்டு வந்தார்.

இந்நிலையில், தான் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்ட குஷியில், தனக்கு அளிக்கப்பட்ட கார் மற்றும் தேர்தல் பாதுகாவலர்களுடன் கூடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஆனால், அதுவே அவருக்கு வினையாகி விட்டது. தனது ‘பப்ளிசிட்டி’க்காக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார்கள் எழுந்தன. அதையடுத்து அவரை தேர்தல் நடத்தும் அலுவலர் பதவியில் இருந்து தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

அடுத்த உத்தரவு வரும் வரை தேர்தல் பணியில் ஈடுபடக்கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு பின்னர், தனது டுவிட்டர் பக்கத்தில் அபிஷேக் வெளியிட்ட பதிவில், ‘அந்த பதிவில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இருப்பினும் பொது மக்களின் ஊழியனாக மக்களிடம் தொடர்பு கொள்ளும் நோக்கில் தான் பதிவை வெளியிட்டேன். இதில் பப்ளிசிட்டி ஸ்டன்ட் ஏதும் இல்லை. இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் முடிவை பணிவுடன் ஏற்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.