மனம் திருந்தி வாழ நினைத்த பெண் மாவோயிஸ்டுக்கு மறுவாழ்வு அளித்த தமிழக அரசு!

மனம் திருந்தி வாழும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பிரபா (எ) சந்தியாவிற்கு ஆவின் பாலகம் அமைத்து கொடுத்து மறுவாழ்வு அளித்துள்ளது தமிழக அரசு.
கடந்த 18.12.2021 அன்று திருப்புத்தூர் மாவட்ட காவல்துறையிடம் சரணடைந்த, கர்நாடகாவைச் சேர்ந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பிரபா (எ) சந்தியா(40) என்பவர், மனம் திருந்தியதால் அவர் அரியூர் ஸ்ரீசாய் வசந்தம் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு பாதுகாப்பு அளித்து வரப்பட்டது. இந்த நிலையில் அவரின் மறுவாழ்விற்காக தமிழக அரசு ”சரணடைதல் மற்றும் மறுவாழ்வு” திட்டத்தின் கீழ் அரியூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீபுரம் – வேலூர் சாலை அரியூரியூர் பகுதியில், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஆவின் பாலகம் அமைத்து கொடுத்து அதன் துவக்க விழா இன்று நடைபெற்றது.
image
இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், ‘Q’-பிரிவு காவல் கண்காணிப்பாளர் கண்ணம்மாள், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. தீபா சத்யன், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு ஆவின் பாலகத்தை திறந்து துவக்கி வைத்தனர்.
image
அப்பொழுது மாவட்ட ஆட்சியர் பேசுகையில், ’’கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையிடம் சரணடைந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பிரபாவுக்கு, தமிழக அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஆவின் பாலகம் அமைத்து தரப்பட்டுள்ளது. எனவே இதுபோன்று சமூக விரோத செயல்கள் மற்றும் அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு, பின்னர் மனம் திருந்தி வருபவர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசின் அனைத்து நல திட்ட உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ’’என்றார்.
மனம் திருந்தி வந்த மாவோயிஸ்டுக்கு ஆவின் பாலகம் தமிழக அரசு அமைத்துக் கொடுத்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.