சென்னை: ‘விஜய் நடித்துள்ள வாரிசு பட வெளியீட்டுக்க் எதிரான தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அப்படி இல்லை என்றால், தமிழ்நாட்டில் தெலுங்கு மட்டுமின்றி, எந்த பிற மொழி திரைப்படமானாலும் வெளியிட முடியாது’ என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நடிகர் விஜய் நடித்திருக்கும் வாரிசு படம் தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக உருவாகி இருக்கிறது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தெலுங்குத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டுக்கானத் திரையரங்க ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது விஜய்யின் திரைப்பட வெளியீட்டுக்கு எழுந்திருக்கும் பிரச்சினை அல்ல. அடுத்தடுத்து வரும் தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டு எதிராக ஆந்திராவில் தொடுக்கப்பட்டிருக்கும் இனப்பாகுபாடு.
நேரடித் தெலுங்கு, கன்னடம், மலையாளம் திரைப்படங்களோ, மொழிமாற்றம் செய்யப்பட்ட பிறமொழி திரைப்படங்களோ எதுவாகினும் தமிழ்நாட்டில் எவ்விதப் பாரபட்சப்போக்குக்கும், கட்டுப்பாடுகளுக்கும் விதிக்கப்படவில்லை. கலைக்கு மொழி, இனம் இல்லை என்று கூறுகின்றனர். அதனை நாங்கள் இன்னும் நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.
எனவே, தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அப்படி இல்லை என்றால், தமிழ்நாட்டில் தெலுங்கு மட்டுமின்றி, எந்த பிற மொழி திரைப்படமானாலும் வெளியிட முடியாதுன தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.