இந்த காலத்திலும் இப்படியொரு காதலா?- ச்சே என்ன மனுசன்யா இந்த ஆளு!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் பிடுப்பன். இவருக்கும், பிராத்தனா என்ற பெண்ணும் உயிருக்கு உயிராக காதலித்து வநதுள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சமீபத்திய சம்மதமும் தெரிவித்திருந்தனர். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்று இருவரும் சந்தோஷத்தில் திளைத்து கொண்டிருந்தபோதுதான் பிடுப்பன், பிராத்தனா இருவரின் வாழ்விலும் விதி ஏகத்துக்கு விளையாட ஆரம்பித்தது.

இருவீட்டாரும் திருமண நிச்சயதார்த்தம் நடத்தி, மணநாள் குறிப்பது குறித்து ஆலோசித்து கொண்டிருந்த வேளையில், சில தினங்களுக்கு முன் பிராத்தனாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோரும், உற்றாரும் பிராத்தனாவை கவுஹாத்தியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார்.

பிராத்தனா உயிரிழந்த செய்தி கேட்டு மனம் ஒடிந்துபோன பிடுப்பன், தங்களின் கல்யாண சடங்குகளுக்காக வாங்கி வைத்திருந்த பொருட்களுடன் பிராத்தனா வீட்டுக்கு வந்துள்ளார். சோகம் சூழ்ந்திருந்த அந்த வீட்டில் கூடியிருந்தவர்கள் முன்பாக, நான் பிராத்தனாவை மணம் புரிந்து கொள்ள உள்ளதாக பிடுப்பன் கூறியே, அங்கிருந்தவர்கள் அவரை வியப்பும், அதிர்ச்சியுமாக பார்த்தனர்.

தான் கொண்டு வந்திருந்த குங்குமம், மஞ்சளை பிராத்தனாவின் முகத்தில் இட்டதுடன், அவரை திருமண பெண்ணாகவே கருதி மாலையும் சூட்டினார். பிராத்தனாவின் கையால் மாலையும் மாற்றி கொண்டார். இப்படி திருமண சடங்குகள் அனைத்தும் முடித்த பிடுப்பன், தான் வாழ்நாளில் இனி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கதறி அழுதப்படி பிராத்தனாவின் உடலை தொட்டு உறுதிமொழியும் எடுத்து கொண்டார் பிடுப்பன். உணர்ச்சிபூர்வமான இந்த சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது.

இறந்த எங்கள் வீட்டு பெண்ணை மணபுரிய உள்ளதாக பிடுப்பன் கூறியபோது எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த காலத்திலும் ஒரு பெண்ணை இந்த அளவுக்கு நேசிக்க முடியுமா என்று பிடுப்பனை வியப்புடனும், பெருமையோடும் பார்க்கின்றனர் பிராத்தனாவின் பெற்றோர், உற்றார மற்றும் உறவினர்கள்.

காதலித்து திருமணம் புரிந்த சில மாதங்களிலோ, சில வருடங்களிலோ விவகாரத்து கேட்டு கோர்ட்டு போவர்கள் அதிகரித்துவிட்ட இந்த கலியுகத்தில், தான் காதலித்த பெண் என்ற ஒரே காரணத்துக்காக அவர் இறந்த பிறகும் அவரை திருமணம் புரிந்துகொண்டுள்ள அசாம் இளைஞன் உண்மையிலேயே அதிசய மனிதன்தான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.