காதலுக்கு இறப்பில்லை… உயிரிழந்த காதலியை திருமணம் செய்த இளைஞர் – மனதை உலுக்கும் வீடியோ

இணையத்தில் எத்தனையோ வீடியோக்கள் வைரலாகும். மன அமைதியை தரும் வீடியோக்களில் இருந்து தூக்கங்களை தொலைக்கச்செய்யும் வீடியோக்கள் வரை அத்தனையும் தற்போது வைரலாகிறது. மக்களும் தங்களின் சுக, துக்கங்களை பகிர்வது போல் அனைத்தையும் பொதுவெளியில் பரப்பி வருகின்றனர். அந்த வகையில், சமீப நாள்களாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோ என்பது துக்கமான சுப நிகழ்ச்சியுடையது என்றுதான் சொல்ல வேண்டும்.

மனதை உருக்கும் ஒரு காதல் திருமணம்தான் தற்போது வைரலாகி வருகிறது. தான் நீண்ட காதலித்து வந்த பெண், திருமணத்திற்கு முன்பு நோய்வாய்ப்பட்டு துரதிருஷ்டவசமாக உயிரிழந்ததை அடுத்தும், அவரையே அந்த காதலர் திருமணம் செய்துள்ளார். அதன் வீடியோதான் தற்போது பலரின் மனதையும் கலங்கச்செய்துள்ளது. 

அசாம் மாநிலத்தின் கௌகாத்தி நகரைச் சேர்ந்த பிதுபன் தமுளி என்ற 27 வயதான இளைஞர், வெள்ளை போர்வையில் உயிரிழந்து படுத்திருக்கும் பிராத்தனா போரா என்ற அவரின் காதலியின் நெற்றியிலும், இரு கன்னங்களிலும் குங்குமத்தை வைக்கிறார். பின்பு, பிரத்தானாவிற்கு வெள்ளை மாலையை ஒன்றையும் அணிவித்துக்கொண்டு, பிரத்தானாவின் ஒப்புதலை வாங்குவது போன்று செய்து, தனக்கும் ஒரு மாலையை அவர் அணிவித்துக்கொண்டு, திருமண சடங்கை நிறைவேற்றினார். 

இதுகுறித்து, பிராத்தனா போராவின் குடும்பத்தினர் கூறும்போது,”பிதுபன் – பிராத்தனா ஆகியோர் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். அவர்களின் காதல் விவகாரம் எங்களுக்கு் தெரியும், பிதுபன் வீட்டாருக்கும் தெரியும். நாங்கள் இணைந்து அவர்களின் திருமணத்திற்கு திட்டமிட்டுக்கொண்டிருந்த போது, துரதிருஷ்டவசமாக பிராத்தனா உயிரிழந்துவிட்டார்” என்றனர்.

மேலும், பிராத்தனாவின் உறவினர் சுபோன் போரா,”சில நாள்களுக்கு முன்பிருந்து பிராத்தனாவுக்கு உடல்நிலை மோசமாக இருந்துள்ளது.. அவருக்கு கௌகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தோம். அவரை காப்பாற்ற நடத்திய அத்தனை போராட்டங்களும் வீணானது. கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 18) சிகிச்சை பலனின்றி பிராத்தனா உயிரிழந்துவிட்டார். 

பிராத்தனாவின் உடலை வீட்டில் வைத்து மரியாதை செலுத்திவந்த போது, பிதுபன் அங்கு திருமணத்திற்கு தேவையான பொருள்களுடன் வந்தார். வந்தவுடன், நான் பிராத்தனாவை திருமணம் செய்துகொள்ள போகிறேன். நாங்கள் அவரிடம் ஒன்றுமே கூறவில்லை, இது எங்கள் கற்பனைக்கும் எட்டாதது. எனது தங்கையை இவ்வளவு ஆழமாக வேறு யாரும் காதலிக்க முடியுமா என தெரியவில்லை. ஆனால், அவர்களின் காதலின் ஆழத்தை அன்று நாங்கள் பார்த்தோம். 

பிதுபன் அந்த திருமண சடங்கை மேற்கொள்ளும்போது விடாமல் அழுதுகொண்டேதான் இருந்தார். எனது தங்கை பிதுபனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஆசைப்பட்டார். அதை, பிதுபன் நிறைவேற்றியுள்ளார்” என்ற உருக்கமாக தெரிவித்தார். 

மேலும், பிராத்தனாவின் உடல் முன்னிலையில், வேறு யாரையும் இந்த வாழ்நாளில் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என உறுதிமொழி எடுத்ததும் பலரின் மனதை உலுக்கியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.