வளரும் நாடுகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் இழப்பு மற்றும் சேத நிதியை நிறுவ, காலநிலை மாற்றம் தொடர்பான கொப்-27 மாநாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2015ஆம் ஆண்டு பரிஸ் நகரில் இடம்பெற்ற கொப் மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானங்களை தொடர்ந்தும் பேணுவதற்கு அங்கத்துவ நாடுகள் தீர்மானித்துள்ளன.
கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவும் அங்கத்துவ நாடுகள் இணங்கியுள்ளன. காபன் துகள்கள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த சில சட்டவிதிமுறைகளை உருவாக்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த இணக்கப்பாட்டிலிருந்து சில வல்லரசு நாடுகள் விலகியிருக்கின்றமை கவலை தரும் விடயம் என்று கொப்-27 மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1994-ம் ஆண்டில் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. இந்த பணித்திட்டத்தில் கையெழுத்திட்டுள்ள 198 நாடுகளும், 1995 முதல் ஆண்டுதோறும் காலநிலை மாநாட்டை கூட்டி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருகின்றன.
ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்டத்தின் 27-வது மாநாடு எகிப்து நாட்டின் ஷார்ம் எல் ஷேக் நகரில் கடந்த 6 ஆம் திகதி ஆரரம்பமானது . இந்த மாநாட்டில் இலங்கை அடங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான தங்களின் பரிந்துரைகள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்து உரையாற்றினர். இந்த மாநாட்டில் முக்கியமாக காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் இழப்பீடு வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இழப்பு மற்றும் சேத நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாடுகள் ஒப்புக்கொண்டன.