கோவை டூ காசி… தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நேரில் காண தமிழக மக்களுக்கு சூப்பர் சான்ஸ்!

காசிக்கும், தமிழகத்திற்கும் இடையில் பழைய தொடர்புகளை புதுப்பிக்கும் வகையிலும், இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையிலும் மத்திய அரசு முக்கிய ஏற்பாட்டை செய்துள்ளது. அதாவது, ”காசி தமிழ் சங்கமம் விழா” என்ற பெயரில் பிரம்மாண்ட விழாவை உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை உடன் பங்கேற்றது கவனம் பெற்றது. இதில் பங்கேற்பதற்காக கோவையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று (நவம்பர் 20) அதிகாலை 4.40 மணிக்கு கோவையில் இருந்து இரண்டாவது ரயில் சேவை தொடங்கியது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 83 பயணிகள் கோவை ரயில் நிலையத்தில் இருந்து காசி தமிழ் சங்கமம் ரயிலில் புறப்பட்டு சென்றனர். முதல் ரயிலில் மாணவர்கள் பல்வேறு குழுக்களாக சென்றது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது ரயிலில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள், இசை கலைஞர்கள் என ஏராளமானோர் இடம்பெற்றிருந்தனர்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளை கோவை மாநகர மாவட்ட பாஜகவினர் மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தியும், மலர் தூவியும் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். கோவை ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டதை அடுத்து, ரயில்வே மற்றும் மாநகர காவல்துறையை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் இசைஞானி இளையராஜாவின் இசைக் கச்சேரி நடைபெற்றது. அதில் ஆர்யா நடிப்பில் வெளியான ’நான் கடவுள்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஓம் சிவ ஹோம்’ என்ற பாடலை பாடினார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி கைகளால் தாளமிட்டு ரசித்து கொண்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, காசியில் தமிழ் சங்கமம் நடத்தும் சிந்தனை பிரதமர் மோடிக்கு எப்படி வந்தது என்று வியந்து கொண்டிருக்கிறேன். மகாகவி பாரதியார் காசியில் தங்கியிருந்த போது நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டார். 22 வயதிலேயே நதிநீர் இணைப்பு குறித்து பாரதியார் பாடியிருக்கிறார்.

ஆனால் அதை தற்போது தான் நாம் பேசுகிறோம். தமிழகத்திற்கும், காசிக்கும் இடையில் பல ஆண்டுகளாக தொடர்பு நீடித்து வருவது பெருமைக்கு உரியது என்று கூறினார். இளையராஜா பேசி முடித்ததும் பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று கைதட்டியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.