சங்கராந்திக்கு விஜய்யின் வாரிசுடு வெளியிட தடையா? – இயக்குனர்கள் பேரரசு, லிங்குசாமி ஆவேசம்

வம்சி பைடி பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் வாரிசு. பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்த படம் அதேநாளில் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் சங்கராந்திக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் தற்போது நேரடி தெலுங்கு படம் அல்லாத மற்ற மொழி படங்களை பண்டிகை நாட்களில் வெளியிடுவதற்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அனுமதி மறுத்துள்ளது.

இதன் காரணமாகவே சங்கராந்திக்கு தெலுங்கில் விஜய்யின் வாரிசுடு வெளியாவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதோடு தெலுங்கு நடிகர்களின் படங்கள் வெளியாகும் அதே நாளில் மற்ற மொழி நடிகர்களின் படங்கள் வெளியானால் தெலுங்கு படங்களின் வசூல் பாதிக்கும் என்றும் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் கூறியிருக்கிறது. அதனால் இதற்கு தமிழகத்தில் உள்ள சீமான், வேல்முருகன் போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அதோடு விஜய் படத்தை ஆந்திராவில் வெளியிட தடை விதித்தால் தெலுங்கு படங்களை தமிழகத்தில் வெளியிட விட மாட்டோம் என்றும் கூறி வருகிறார்கள்.

இப்படியான நிலையில் சென்னையில் ‛துடிக்கும் கரங்கள்' என்ற படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர்கள் லிங்குசாமி, பேரரசு ஆகியோரும் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அதுகுறித்து பேரரசு கூறுகையில், ‛தமிழகத்தில் இதுபோன்ற பிரிவினைகள் இல்லை. தெலுங்கு படமான பாகுபலி, கன்னட படமான கேஜிஎப் போன்ற படங்கள் தமிழகத்தில் பண்டிகை தினத்தில் தான் வெளியானது. அதோடு மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வனை கொண்டாடிய நாம் கன்னடத்தில் வெளியான காந்தாரா படத்தைக் கொண்டாட தவறவில்லை.
இப்படி தமிழர்கள் மட்டுமே ஆந்திர, மலையாள மொழி படங்களை திராவிடம் என்ற உணர்வோடு பார்க்கிறோம். ஆனால் அவர்கள் தமிழர்கள் என்று நம்மை பிரித்துப் பார்க்கிறார்கள். அதனால் தென்னிந்திய விநியோகஸ்தர்கள் இதில் தலையிட்டு வாரிசுடு படத்தை சங்கராந்திக்கு வெளியிடுவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார் இயக்குனர் பேரரசு.

அவரைத் தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமி கூறுகையில், ‛வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என்றால், தமிழகத்தில் தெலுங்கு சினிமா வாரிசுக்கு முன் வாரிசுக்கு பின் என்றாகி விடும். இது சினிமாவில் பொற்காலமாகும். பல காலகட்டங்களாக பான் இந்தியா என்ற பெயரில் தமிழ் தெலுங்கில் பல்வேறு படங்கள் வெளிவந்துள்ளன. இங்கு ஓடிடியில் வெளியாகும் படங்களை எங்கோ ஒரு மாநிலத்தில் உட்கார்ந்து ரசிகர்கள் பார்த்து ரசிக்கிறார்கள். அதனால் இதுபோன்ற காலகட்டத்தில் இப்படிப்பட்ட பிரச்னைகள் வரவே கூடாது.

தமிழ் படத்தை தெலுங்கில் வெளியிடக் கூடாது என்று சொன்னால் அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு மிகப்பெரிய பிரச்னையாகும். வாரிசுக்கு முன்பு வாரிசுக்கு பின்பு என்று பெரிய விஷயமாக அது உருவெடுத்து விடும். ராஜமவுலி இயக்கிய பாகுபலி, ஆர் ஆர் ஆர் படங்கள் எல்லாம் தமிழகத்தில் வெளியாகி வெற்றி பெற்றன. அதேபோல் ஷங்கர் இயக்கிய எத்தனையோ படங்கள் ஆந்திராவில் பண்டிகை நாட்களில் வெளியாகி உள்ளன. அதனால் விஜய் படத்தை தெலுங்கு மொழியில் ஓட விடக்கூடாது என்ற எண்ணத்தோடு யாராவது செயல்பட்டால் அதை உடனடி மாற்றிக் கொள்ளுங்கள்.

தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் இதை ஒரு பிரச்னையாக மாற்றக்கூடாது. ஆந்திராவில் விஜய் படத்தை வெளியிட தடுத்தால் நாங்களும் தெலுங்கு படங்களை தமிழகத்தில் வெளியிட தடுப்போம். அதனால் இது போன்ற விஷயங்களை இரு தரப்பினரும் சுமூகமாக பேசி தீர்க்க வேண்டும்' என்று இயக்குனர் லிங்குசாமி கூறியிருக்கிறார்.

இப்படி விஜய்யின் வாரிசு படம் சங்கராந்திக்கு தெலுங்கில் வெளியாகாது என்ற செய்திகள் வெளியானதை அடுத்து சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் இருந்து எதிர்ப்புகள் அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.