சிறப்பு!  பருவநிலை மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இழப்பீடு| Dinamalar

ஷர்ம் எல்ஷேக்-ஒரு சில வளர்ந்த நாடுகள் வெளியிடும் காற்று மாசால் ஏற்படும் பருவநிலை மாறுபாடு பிரச்னையில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில் பொது நிதி உருவாக்க, ஐ.நா., பருவநிலை மாறுபாடு கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாறுபாடு பிரச்னை என்பது உலகளாவிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பருவம் தவறிய மழை, திடீர் வெள்ளம், சூறாவளி, பஞ்சம், வறட்சி, வெப்பநிலை அதிகரிப்பு என, பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

உலக நாடுகள் இணைந்து, பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ௨௦௧௬ல், பிரான்சின் பாரிஸ் நகரில் ஒப்பந்தம் செய்தன.

இழப்பீடு

மொத்தம், ௧௯௫ நாடுகள் கையெழுத்திட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, வெப்பநிலை உயர்வை, ௧.௫ டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது.

பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், காற்றை மாசுபடுத்தும் கார்பன் – டை – ஆக்சைடு எனப்படும் கரியமில வாயு வெளியிடுவதை குறைக்க தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக, தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன.

அதன்படி, ‘சி.ஓ.பி., – ௨௭’ எனப்படும் ஐ.நா.,வின் பருவநிலை மாற்றத்துக்கான கட்டமைப்பு மாநாடு, தென் மேற்கு ஆசியாவில் உள்ள எகிப்தின் ஷர்ம் எல்ஷேக் நகரில், இம்மாதம் ௬ – ௧௮ வரை நடந்தது. இந்த மாநாட்டில் ௧௯௩ நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

பருவநிலை மாறுபாடு பிரச்னையால் ஏழை நாடுகளுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு பொறுப்பேற்பது தொடர்பாக இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

அதன் இறுதியில், ஏழை நாடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வகையில், பொது நிதி உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம்கையெழுத்தானது. முதல்கட்டமாக வளர்ந்த நாடுகள் மற்றும் பிற நிதி அமைப்புகள் இந்த நிதிக்கு தங்களுடைய பங்களிப்பை அளிக்கும். அதில் இருந்து, பருவநிலை மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

இது குறித்து சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறியுள்ளதாவது:

இது வரலாற்று சிறப்புமிக்க முடிவாகும். மிகவும் வலுவான வளர்ந்த நாடுகளுக்கு எதிராக ஏழை நாடுகள் ஒரே குரலில் ஒலித்தபோது, அதற்கு உரிய பலன் கிடைத்துள்ளது.

வலியுறுத்தல்

வளர்ந்த மற்றும் பணக்கார நாடுகள் ஏற்படுத்தும் காற்று மாசால், ஏழை நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு, வளர்ந்த நாடுகளே பொறுப்பு என்பது இதன் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், மிகப் பெரும் பொருளாதார நாடாக இருந்தாலும், சீனா போன்றவை வளர்ந்து வரும் நாடாக உள்ளன.

அதனால், அவை இந்த நிதிக்கு தற்போதைக்கு எந்த பங்களிப்பும் அளிக்க வேண்டியதில்லை. ஆனால், அதிக அளவில் மாசு ஏற்படுத்தும் சீனா போன்ற நாடுகளும் பங்களிப்பு அளிப்பது தொடர்பாக விவாதிக்க அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளன.

அடுத்து வரும் கூட்டங்களில் இதில் முடிவு ஏற்படும் என, எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஐ.நா., மாநாட்டில், இழப்பீடு வழங்க நிதி உருவாக்குவது தொடர்பாக விவாதம் முடிவுக்கு வந்துள்ளது.

அதே நேரத்தில், பருவநிலை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விவாதம் தொடர்கிறது.

இந்தியா வரவேற்பு

ஐ.நா., கூட்டத்தில் பங்கேற்ற நம் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியதாவது:வரலாற்று சிறப்பு மிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஏழை நாடுகள் மிக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. பருவநிலை மாறுபாடு பிரச்னைகளால் விவசாயிகள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கார்பன் வெளியிடுவதை குறைப்பதில் அவர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது கடுமையான செயலாக இருக்கும். அதனால் தான், இந்தியாவின் தேசிய வளர்ச்சி இலக்கில் இருந்து விவசாயத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.